Header Ads

ad728
 • Breaking News

  தீர்க்கப்படாத மர்மங்கள் 1 - ஆன்டிகிதெரா : வரலாற்றின் முதல் கணினி

  ஒவ்வொரு நிகழ்வுக்கும் தீர்வையோ விளக்கத்தையோ கொடுப்பது நவீன விஞ்ஞானத்தின் இயல்பு. உலகில் சில நிகழ்வுகள் நமது தற்போதைய தொழில்நுட்ப அறிவின் மூலம் விளக்கமுடியாதவை. தீர்க்கப்படாத இந்த மர்மங்கள் எதிர்காலத்தில் அறிவியல் முன்னேற்றத்தால் தெளிவாகலாம். அவ்வாறான உலகம் மறந்துவிட்ட சில தீர்க்கப்படாத மர்மங்கள் இங்கே தொடராக…

    1. ஆன்டிகிதெரா பொறிமுறை (Antikythera Mechanism)  - வரலாற்றின் முதல் கணினி
  ஏதென்ஸில் உள்ள தேசிய தொல்பொருள் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஆன்டிகிதெரா வழிமுறை.

  கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், கிரேக்க நீர்மூழ்கி வீரர்கள் ஒரு கப்பலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது புயல் தாக்கியதால், சிறிய தீவான ஆன்டிகிதேரா அருகே கரையொதுங்கினர். அவர்கள், வானிலை சீராகும்வரை அங்கேயே காத்திருக்க முடிவு செய்தனர். அங்கே ஒரு மர்மத்தை சந்திக்கப்போவதை அவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை.

  சிறிது நேரத்தில் புயல் கடந்துவிட்டது. கப்பலில் இருந்தவர்கள், அந்தத் தீவை சுற்றிப்பார்க்கத் தொடங்கினர். திடீரென அவர்களில் ஒருவர், பரபரப்பாக ஓடிவந்தார். கடலோரத்தில் ஒரு கப்பல் விபத்தில் சிக்கி சிதைவடைந்திருப்பதாகவும், அங்கே உருக்குலைந்த நிலையில் சடலங்கள் தெரிவதாகவும் மற்றவர்களுக்கு கூறினார். அவர்களின் கேப்டன் உடனடியாக அவ்விடத்துக்கு விரைந்து சென்று பார்த்தபோது, மனித உடல் பாகங்கள் நீருக்கடியிலும் கப்பலருகிலும் சிதறிக்கிடக்கும் காட்சியைக் கண்டு திகைத்தார். ஆனால் சிறிது நேரத்தில், அவை உண்மையில் மனித உடல்களல்ல, சிலைகள் என்பதைக் கண்டறிந்தனர்.

  அந்தக் கப்பல் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் இதே வழியாக சிலைகளை கொண்டு சென்றபோது, இதே போல் புயல் தாக்கி விபத்தடைந்ததென தெரிய வந்தது. அக்கப்பல் இடிபாடுகளில் காணப்படும் நாணயங்கள், அது கிறிஸ்துவுக்கு முன் 85ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்று கூறின. உடனடியாக, இரண்டாயிரம் ஆண்டுகளாக கடலில் மூழ்கியிருந்த அந்தக் கப்பல் பொக்கிஷங்களை கிரேக்க அரசாங்கம் ஆராயத்தொடங்கியது.


  ஆன்டிகிதெரா பொறிமுறையைக் கொண்ட இடிபாடுகளை அகழ்வாராய்ச்சி செய்ய செல்லும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள். சிர்கா 1900-1901.

  கப்பலிலிருந்த சிலைகள் மற்றும் புராதன பொருட்களை மீட்டெடுப்பதற்கான சலசலப்பில், அதன் மிகப்பெரிய ஆச்சரியம் ஆரம்பத்தில் கவனிக்கப்படவில்லை. சிறிது காலத்தின் பின்னரே, வியக்க வைக்கும், நவீன தோற்றமுடைய ஒரு சாதனத்தை அந்த கப்பலின் மீட்புப் பொருட்களிடையே கண்ட தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியமடைந்தனர். அது 82 துண்டுகளையும் 30 இன்டர்லாக் கியர் சக்கரங்களையும் கொண்டிருந்தது. அது 14 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பம். உண்மையில், ஆன்டிகீதெரா பொறிமுறையில் பயன்படுத்தப்படும் கியர் வழிமுறைகள் கடிகாரங்களில் மட்டுமே ஐரோப்பாவில் பயன்பட்டு வந்தது.

  அந்த சாதனம் ஒரு சிக்கலான பொறிமுறையை கொண்டது என்பது ஆய்வாளர்களுக்கு புரிந்தது. அதன் கோட்பாட்டையும் பொறிமுறைகளையும் விளக்க அறிவியலாளர்களால் இயலவில்லை.அதன் முழுமையான கோட்பாடு எக்ஸ்ரே தொழில்நுட்பத்தின் மூலமே தெரியவந்தது. ஸ்கேன் மூலம், வெளிப்படுப்பட்ட அந்த ஆன்டிகிதெரா பொறிமுறை மிகவும் நவீனமானது. மனித அறிவினால் பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன் இதனை உருவாகியிருக்க முடியாதென பலரும் கருதினர். இந்த சாதனத்தை உருவாக்க வேற்றுகிரகவாசிகள் உதவியதாகக் கூறும் ஒரு பிரபலமான கோட்பாடும் உள்ளது.


  ஆன்டிகிதெரா பொறிமுறையின் உட்புறம் எப்படி இருந்திருக்கும் என்பதற்கான புனரமைப்பு.

  இந்த சாதனமே, பெரும்பாலும் “உலகின் முதல் கணினி என்று குறிப்பிடப்படுகிறது. ஆன்டிகிதெரா பொறிமுறையானது உண்மையில் வானவியலில் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். அதன் இரண்டு உலோக டயல்கள் இராசி மற்றும் ஆண்டின் நாட்களைக் காண்பிக்கின்றன. சூரியன், சந்திரன் மற்றும் கிரேக்கர்களுக்கு தெரிந்த ஐந்து கிரகங்களின் (செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி மற்றும் சனி) இருப்பிடத்தைக் குறிக்கும் சுட்டிகளும் அதில் உள்ளன.

  அதிலுள்ள, கியர்கள் மற்றும் சக்கரங்கள், கடினமான தர்க்கவிதிகளால் உருவாக்கப்பட்டுள்ளன. பூமியைச் சுற்றியுள்ள சந்திரன் போன்ற வான்பொருட்களின் இயக்கங்களைப் பிரதிபலிக்க, வெவ்வேறு அளவிலான சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் அளவீடுகள் மிகவும் துல்லியமாக இருக்கிறது. இது கிரகணங்கள் போன்ற வான நிகழ்வுகளை கணிக்கவும், சந்திரனின் மாற்றங்களைக் காட்டவும் உதவுகின்றது.


  ஆன்டிகிதெரா பொறிமுறையானது மிகச்சிறிய கல்வெட்டுகளையும் கொண்டுள்ளது, அவை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு அதன் தோற்றம் குறித்த கோட்பாடுகளை உருவாக்க உதவுகின்றன.


  ஆன்டிகிதெரா பொறிமுறையின் மேம்பட்ட கியர்கள் (புகைப்படம் சாதனத்தின் புனரமைப்பை சித்தரிக்கிறது).

  இந்த சாதனத்தைப் பற்றி இன்னும் பல பதிலளிக்கப்படாத பல கேள்விகள் உள்ளன:
     1. இது போன்ற சாதனம் ஒன்றுதான் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சாதனம் உண்மையில் கிறிஸ்துவுக்கு முன்பே பாவனையில் இருந்ததா?
    2. அவ்வாறு இந்த தொழில்நுட்பம் பண்டைய உலகில் இருந்திருந்தால், அது ஏன் இடைக்காலம் வரை காணாமல் போனது?
   3. கணனிகளால் மட்டுமே உருவாக்கக்கூடிய தொழில்நுட்பத்தை உருவாக்கியவர் யார்?  அவர்கள் எப்படி மிக நுணுக்கமாக வடிவமைத்திருக்க முடியும்?

     4. 14 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வகை தொழில்நுட்பம், சில்லுகளையும் பற்களையும் கொண்ட கடிகாரங்களில் மாத்திரமே பயன்பட்டு வந்தது. பண்டைய காலத்தில் இதைவிட மேம்பட்ட ஒரு தொழில்நுட்பம் எவ்வாறு உருவாகியது?

     5. வேற்றுக்கிரகவாசிகள் இதனை உருவாக்க உதவினரா?

  இதனைச் சுற்றியுள்ள மர்மம் இன்னும் விடுபடவில்லை. 

  அடுத்த பகுதிகளை படிக்க  மர்மங்கள் தொடரும்....

  No comments

  Post Top Ad

  ad728

  Post Bottom Ad

  ad728