• Breaking News

    ரஷ்யாவில் பொதுவாக்கெடுப்பு தொடங்கியது

    ரஷ்யாவில் ஜனாதிபதியின் பதவிக் காலம், 6 ஆண்டுகள் ஆகும். அந்நாட்டு அரசியல் சாசனப்படி, ஒருவர், இரண்டு முறை மட்டுமே தொடர்ந்து  ஜனாதிபதியாக  நீடிக்கலாம். அதன்படி, 2008 வரை, இரண்டுமுறை தொடர்ந்து ஜனாதிபதியாக இருந்த, புட்டின், அதன் பின்னர் பிரதமராக பதவி வகித்தார். 

    அதனைத் தொடர்ந்து 2012-ல் மீண்டும் ஜனாதிபதி பொறுப்புக்கு வந்த அவர், 2018 ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று, பதவியை தக்க வைத்துக் கொண்டார். 

    அவரது பதவிக் காலம், 2024-ல் முடிகிறது. அதன் பின்னர் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அந்த நாட்டின் சட்டத்தில் இடமில்லை. சட்ட திருத்த மசோதா இந்த நிலையில், அரசியல் சாசன சட்ட திருத்தங்கள் மூலம் பல்வேறு சீர்திருத்தங்களை செயல்படுத்தப் போவதாக, கடந்த ஜனவரியில், புட்டின் அறிவித்தார். 

    அதன்படி, அரசியல் சாசன சட்ட திருத்த மசோதா அந்த நாட்டு  பாராளுமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்டது.அதில், ஓய்வூதியத்திற்கு உறுதிமொழி வழங்குவது, தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம், ரஷ்ய ஜனாதிபதி   பதவி காலத்திற்கான வரம்பை தளர்த்துவது உள்ளிட்ட ஷரத்துகள் இடம் பெற்றிருந்தன. 

    இந்த சட்ட திருத்த மசோதா அந்நாட்டு பராளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒருமனதாக நிறைவேறியது. 

    இந்த மசோதா சட்டமானால் 2024 மற்றும் 2030-ல் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தல்களில் புதின் போட்டியிடுவதற்கு எந்த தடையும் இருக்காது.

     அதன்படி இந்த 2 தேர்தல்களிலும் புதின் வெற்றி பெறும் பட்சத்தில் அவர் 2036 வரை, அதாவது, அவரது, 83வது வயது வரை, ஜனாதிபதியாக தடையின்றி பதவி வகிக்கலாம். 

    நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறிய இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு அந்நாட்டு அரசியலமைப்பு கோர்ட்டும் ஒப்புதல் அளித்துவிட்டது. ஜனாதிபதி புட்டினும்  இந்த மசோதாவில் கையெழுத்து போட்டு விட்டார். 

    எனினும் இதை சட்டமாக்குவதற்கு முன்பு மக்களின் விருப்பத்தை அறிய பொது வாக்கெடுப்பு நடத்த புட்டின் விரும்புகிறார். சட்டபூர்வமாக இது தேவையில்லை என்றாலும் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்வதில் ஜனநாயகத்தை பொறுப்பை உறுதி செய்ய பொதுவாக்கெடுப்பை நடத்த புட்டின் முடிவு செய்தார். 

    கடந்த ஏப்ரல் மாதம் 22- ஆம் திகதி இரண்டு வாக்கெடுப்பை நடத்த ரஷ்யா திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக அது ஜூலை 1 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

     இந்த நிலையில் பொது வாக்கெடுப்புக்கு இன்னும் சரியாக ஒரு வாரம் இருக்கும் நிலையில் மக்களின் கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டு நேற்று வாக்குப்பதிவு தொடங்கியது. 

    ஜூலை 1 ஆம் திகதி வரை இந்த வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு உடனடியாக முடிவு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad