• Breaking News

    சீனாவுக்கு ஆதரவாக கருத்துக்களை பரப்பிய கணக்குகள் நீக்கியது டுவிட்டர்


    சீனாவில் சமூக வலைதளமான டுவிட்டர் அதிகாரபூர்வமாக தடை செய்யப்பட்டிருந்தாலும், வி.பி.என். மூலம் பலரும் டுவிட்டரை பயன்படுத்தி வருகின்றனர். சீன ஆதரவு பிரசாரத்தின் நோக்கமானது, வெளிநாடுகளில் உள்ள சீனாவை சேர்ந்தவர்களின் திறனை பயன்படுத்தி கட்சியின் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான முயற்சி என டுவிட்டருடன் இணைந்து பணியாற்றிய அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    முக்கியமாக இந்த கணக்குகள் அனைத்தும் சீன மொழிகளில் மட்டும் டுவீட் செய்வதாகவும் டுவிட்டர் நிறுவனம் கூறியுள்ளது. சி.என்.என். தகவலின்படி, டுவிட்டர் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றிய நிபுணர்கள் கூறுகையில், சீன ஆதரவு கணக்குகள், ஹாங்காங் போராட்டம், கொரோனா தொற்று மற்றும் மற்றவை குறித்து போலியான செய்திகளை பரப்பி வந்துள்ளனர்.

    ஸ்டான்போர்டு இணைய ஆய்வகத்தின் ஆராய்ச்சி மேலாளர் ரெனீ டிரெஸ்டா கூறுகையில், ‘‘இந்த கணக்குகள் பல ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்டன. மேலும் கொரோனா தொற்று பற்றி பதிவுகளை இடுவதில் ஈடுபட்டுள்ளன. கொரோனா தொற்றை ஒழிக்க சீனா பாடுபடுவதாக பாராட்டு தெரிவித்தும், ஹாங்காங் போராட்டக்காரர்கள் மற்றும் அமெரிக்காவை விரோதிகளாக சித்தரித்தும் டுவீட்களை பதிவு செய்துள்ளன’’ என்றார்.

    டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக புவிசார் அரசியல் குறித்து பரப்புவது, தனது இயங்குதள கொள்கைக்கு எதிராக உள்ளது. சீனாவிற்கு சாதகமான செய்திகளை உருவாக்குவதில் 23,750 கணக்குகள் முக்கிய நெட்வோர்க் உடன் இணைந்து மிகவும் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்ததையும், அவற்றை ரீ-டுவீட் செய்து பரப்புவதற்கு பயன்படுத்தப்பட்ட 1 லட்சத்து 50 ஆயிரம் கணக்குகளை அடையாளம் கண்டோம். இந்த 23,750 கணக்குகள், சுமார் 3 லட்சத்து 48 ஆயிரத்து 608 முறை டுவீட் செய்துள்ளதாக ஸ்டான்போர்டு இணைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல் ரஷ்ய அரசுக்கு ஆதரவான 1,000 டுவிட்டர் கணக்குகளையும், துருக்கி அரசுக்கு ஆதரவான செயல்பட்டு வந்த 7,340 கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது .கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், ஹாங்காங்கில் அரசியல் முரண்பாட்டை விதைக்க முயற்சித்த, சீனாவில் செயல்பாட்டில் இருந்த சுமார் 1,000 டுவிட்டர் கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad