• Breaking News

    இலங்கைக்கு கடத்தவிருந்த கடல் அட்டைகள் பறிமுதல்

     கடந்த ஆறு நாட்களில் இலங்கைக்குக் கடத்த இருந்த தடை செய்யப்பட்ட 3 ஆயிரம் கிலோ கடல் அட்டைகளைப் பறிமுதல் செய்த வனத்துறையினர் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் 24 லட்சம் மதிப்பிலான நாட்டுப் படகுகளும், கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய 7 குற்றவாளிகளையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

    இலங்கைக்கு அருகே ராமேஸ்வரம் உள்ளதால் மன்னார் வளைகுடா கடல் வழியாகத் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள், கடல் பல்லி, டால்பின் துடுப்பு உள்ளிட்டவை சமீப காலமாக அதிகளவு கடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று இராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்குக் கடல் அட்டைகள் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து மண்டபம் வனத்துறையினர் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அப்போது வேதாளை கடற்கரை நோக்கி வந்த நாட்டுப்படகு ஒன்று வனத்துறையினரைக் கண்டதும் கரைக்கு வராமல் மீண்டும் கடலுக்குள் சென்றுள்ளது.

    இதனைக் கண்ட வனத்துறையினர், ரோந்து படகில் துரத்திச் சென்று முயல்தீவு அருகே வைத்துத் தப்பிச் சென்ற நாட்டுப்படகை மடக்கிப் பிடித்து சோதனை செய்ததில் படகில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்துள்ளது.

    இதனை அடுத்து படகையும் அதிலிருந்த இருவரையும் கைது செய்து மண்டபம் வனத்துறை சோதனை சாவடிக்கு அழைத்து வந்துள்ளனர்.

    விசாரணையில் வனத்துறையினரைக் கண்டதும் நாட்டுப்படகில் இருந்து 500 கிலோ உயிர் கடல் அட்டைகளைக் கடலில் போட்டு விட்டதாகவும், படகில் சுமார் 300 கிலோ கடல் அட்டைகள் மட்டுமே இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

    இதனையடுத்து வேதாளையை சேர்ந்த மீரான்கனி, முகமது நசீர் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க மண்டபம் வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சுமார் 8 லட்சம் மதிப்பிலான நாட்டுப்படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த ஆறு நாட்களில் மண்டபம் வனத்துறையினரின் தீவிர நடவடிக்கையால் 3 ஆயிரம் கிலோ கடத்தல் கடல் அட்டைகள் மற்றும் 3 நாட்டுப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 7 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad