Header Ads

ad728
 • Breaking News

  அரசியல் வெற்றிக்காகவே தமிழ்த் தேசியம் என்கின்ற ஆடையை அணிந்துள்ளார்கள்! பிள்ளையான்

   சிலர் தோற்றுப் போன பின்னர் அரசியல் வெற்றிக்காகவே தமிழ்த் தேசியம் என்கின்ற ஆடையை அணிந்துள்ளார்கள். இன்று அதைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இளைஞர்களை உசுப்பேற்றுகின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமாகிய சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

  போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆணைகட்டியவெளி - சின்னவத்தை 02 கிலோமீட்டர் வீதி கொங்கறீற்று வீதியாகப் புனரமைப்பு செய்து மக்கள் பாவனைக்காகக் கையளிக்கும் நிகழ்வில் நேற்றையதினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

  நானும் போராட்ட காலத்திலிருந்து அவதானித்திருக்கின்றேன். எல்லா பத்திரிகைகளிலும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளில் வருகையைப் பெரிய எழுத்துகளில் தான் எழுதுவார்கள். அவ்வாறான செய்திகள் வந்து மக்களை ஈர்ப்புச் செய்திருக்கின்றதே ஒழிய நடைமுறைகளிலே எதுவும் நடைபெறவில்லை என்பதை நாங்கள் உணர்ந்திருக்கின்றோம்.

  எமது மக்களை மெல்ல மெல்ல யதார்த்தத்திற்குக் கொண்டு வருகின்றோம். என்னுடைய அரசியல் வாழ்க்கையும் சாணக்கியனின்(Raamanickam Shanakkiyan) வயதும் ஒன்றாக இருக்கும். அவரது பாண்டித்தியம் சிறப்பானது. ஆனால், அவர் எங்களுடைய பாதையில் வந்து என்னைப் போன்று அரசாங்கத்துடன் இணைந்து மக்களுடன் சேவையாற்ற முற்பட்டுத் தோற்றுப் போனார்.

  தோற்றுப் போன பின்னர் அரசியல் வெற்றிக்காகவே தமிழ்த் தேசியம் என்கின்ற ஆடையை அணிந்தார். இன்று அதைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இளைஞர்களை உசுப்பேற்றுகின்றார். எவ்வாறு தேசிய உணர்வு மாறி மாறி வர முடியும். இவ்வாறான பேச்சுக்கள் எதையாவது பெற்றுத் தந்தால் நியாயமாக இருக்கும். ஆனாலும் எதிர்க்கட்சி அரசியலும் தேவைதான் சில நியாயமான விடயங்களும் பேசுகின்றார்கள்.

  ஆனால் மக்களைக் குழப்புகின்ற, சிங்கள மக்களோடு குரோதமான மனநிலையை உண்டுபண்ணுகின்ற விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. பிழையான விடயங்களை எதிர்த்துக் கொண்டு அரசின் பங்காளியாக எமது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுப்பதுதான் காலத்தின் தேவை. இது நாங்கள் கற்றறிந்த பாடம். இந்த அரசியல் கற்றுத்தந்த கசப்பான உண்மையும் இதுவே. யார்மீதும் தனிப்பட்ட விமர்சனத்தைச் செய்வதில் எவ்வித பயனும் இல்லை.

  இவர்கள் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி என்கின்ற விடயத்தைக் கொண்டு வந்து ஒரு அரசியல் எழுச்சியை அல்லது இளைஞர்களைத் திருப்பப் பார்த்தார்கள். ஆனால் அதில் தோற்றுவிட்டார்கள். உணர்வை வைத்து மாத்திரம் அனைத்து விடயங்களையும் நோக்காமல் எங்களுடைய எதிர்கால சந்ததியை உறுதியான தளத்தில் கொண்டு செல்வதற்காக நாங்கள் பாடுபட வேண்டும்.

  கிழக்கு மாகாணம் என்பது தமிழர்களின் மாகாணமாக இருந்தாலும், நீண்ட காலப் போராட்டத்தினால் பொருளாதார உற்பத்தியில் நலிவுற்றுப் பின்தங்கி இருப்பதன் காரணமாகப் பல சவால்களை எதிர்கொண்டிருக்கின்றோம். இந்தச் சவால்களை எதிர்கொள்வதற்கு இன்னும் இன்னும் வீழ்ச்சிப் போக்கான அரசியற் தீர்மானங்களை எடுக்காமல் தந்திரோபாயமான அரசியல் சித்தாந்தத்தை நாங்கள் உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

  No comments

  Post Top Ad

  ad728

  Post Bottom Ad

  ad728