Header Ads

ad728
 • Breaking News

  “ஜெயலலிதா அம்மா எனக்கு எம்.ஜி.ஆர். மாதிரிண்ணே!” - வடிவேலு  ''இந்த ரெண்டு வருசம்... எனக்கு ரெண்டு வாரம் மாதிரிண்ணே. நல்லா மல்லாக்கப் படுத்துத் தூங்குனேன். ஆசைப்பட்டதெல்லாம் வள்ளுவதக்குனு தின்னேன். என்னப் பெத்த ஆத்தா, பொண்டாட்டி, புள்ளகுட்டிகளோட நேரம் செலவழிச்சேன். ரொம்ப முக்கியமா, 'யார் நல்லவன்... யார் கெட்டவன்’னு அடையாளம் கண்டுக்கிட்டேன். அடிக்கடி குல தெய்வத்துக்குக் கும்பிடு போட்டுக்கிட்டேன். இது அந்த சாமியே எனக்குக் கொடுத்த வெயிட்டீஸ் பீரியட்ணே!'' - உற்சாகமும் பூரிப்பும் மீண்டும் வடிவேலு முகத்தில்!

  'ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்’ மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'ரீ-என்ட்ரி’ கொடுக்கிறார் வடிவேலு.

  ''கிருஷ்ணதேவராயர் அரசவையில் இருந்த விகடகவி, தெனாலிராமன். அவனுக்கு அரசர்கிட்ட ரொம்ப நல்ல பேரு. அப்படி நல்ல பேரோட இருந்தா, சுத்துப்பட்டு ஆளுகளுக்குப் புடிக்குமா? சூழ்ச்சி செஞ்சு தெனாலிராமனை சூதுல சிக்க வெக்கிறாங்க. அதுல இருந்து எப்படி வெளில வர்றான்ங்கிற க்ளைமாக்ஸை நோக்கிப் படம் போகும்ணே.

  படத்துல கிருஷ்ணதேவராயர் கேரக்டரும் வெளுத்தெடுக்கும். அதுலயும் நானே நடிச்சா நல்லா இருக்கும்னு டைரக்டர் தம்பி யுவராஜா சொன்னாப்ல. கருத்தான தம்பி. சொன்னா சரியாத்தான் இருக்கும்னு அந்த வேசத்தையும் நானே போட்டுக்கிட்டேன். ஏ சென்டர் கைதட்டி ரசிப்பாங்க... பி, சி சென்டர்லாம் அதிரும் பாருங்க!''

  ''தெனாலிராமன், அறிவுபூர்வமாப் பேசுற  ஒரு விகடகவி. நீங்க உடல்மொழியில பின்னுற கலைஞன். இந்த ரெண்டையும் சேர்த்து அந்தக் கேரக்டருக்கு எப்படி உயிர்கொடுத்திருக்கீங்க?''

  '''தெனாலிராமன் தன் அறிவைப் பயன்படுத்தி அலட்டிக்காம காமெடிப் பண்ணினவர். நீங்க பாடி லாங்குவேஜ்ல பெர்ஃபாமன்ஸ் பண்றவர். உங்களுக்கு எப்புடி அந்த கேரக்டர் செட்டாகும்’னு பச்சையா, நேரடியா கேக்காம சுத்தி வளைச்சுக் கேக்கிறீங்க. உங்க சூது புரியுதுண்ணே. ஆனா, இது நல்ல கேள்வி. உங்கள மாதிரியே 'வடிவேலு நல்லாருக்கணும்’னு நினைக்கிற மிச்சம்சொச்ச நண்பர்களும் இதே கேள்வியக் கேட்டாக. அவுககிட்ட சொன்னதையே உங்கள்ட்டயும் சொல்றேன். 

  நீங்க ஊருக்குச் சொல்லிடுங்க. கதையைச் சொன்னதும் உடனே ஷூட்டிங் கிளம்பிடலண்ணே. தினமும் காலையில டைரக்டர் என் ஆஃபீஸ் வந்துடுவார். அவரு ஒவ்வொரு சீனா சொல்லச்சொல்ல, இப்படி வெச்சுக்கலாமா, அப்படி வெச்சுக்கலாமானு விதவிதமா நடிச்சுக்காட்டுவேன். 'அண்ணே முதல்ல பண்ணினதையும், நாலாவதா பண்ணுனீங்கள்ல ஒரு மானரிசம் அதையும் சேர்த்துப் பண்ணுங்க, சரியா வரும்’னு பெஸ்டா பொறுக்கி எடுத்தார். இப்புடி ஆரம்பத்துல இருந்து க்ளைமேக்ஸ் வரை அவருக்கு லைவ்வா நடிச்சுக்காட்டி சீனை ஃபைனல் பண்றதுக்கு ரெண்டு மாசம் டயம் எடுத்துக்கிட்டோம்ணே. சந்தேகமே வேணாம்.. படம் பாருங்க பிச்சிக்கும்!''

  ''எந்த தைரியத்தில் கல்பாத்தி அகோரம் இந்தப் படத்தைத் தயாரிக்க ஒப்புக்கிட்டார்?''

  ''அப்புடில்லாம் ஒண்ணும் இல்லைண்ணே. நீங்களா ஏதாவது பத்த வெச்சிட்டுப் போய்டாதீங்க. நம்ம படத்தைப் பத்தி இந்த மாதிரி ஏகப்பட்ட வதந்தி சுத்தியடிக்குதுண்ணே. இதுக்கு முன்னயும் என்னை வெச்சுப் படம் பண்ண நிறைய தயாரிப்பாளர்கள் வந்தாங்க. ஆனா, நான்தான் நல்ல கதை வரட்டும்னு இருந்தேன். அகோரம் ஐயா அற்புதமான தயாரிப்பாளர். 'தெனாலிராமன் படத்தை உங்களை வெச்சு தயாரிக்கிறதுல ரொம்ப சந்தோஷம்’னார். 'நான் எடுத்த எந்தப் பட ஷூட்டிங்குக்கும் இதுவரை போனதில்லை வடிவேலு’னு சொல்லிட்டு, சுற்றுலா போறமாதிரி குடும்பத்தோட வந்தார். மனுஷன் சொக்கத்தங்கம்ணே... ''

  ''உங்களைச் சுத்தி இருக்கிறவங்கள்ல 'நல்லவர் யார், கெட்டவர் யார்னு அடையாளம் கண்டுகிட்டேன்’னு சொன்னீங்களே. அவங்கள்லாம் யார் யார்னு சொல்லுங்களேன்!''

  ''அதைக் கண்டிப்பா சொல்லித்தானே ஆகணும். அப்பதானே மக்களுக்கு உண்மை என்னன்னு தெரியும். ஆனா, அந்தக் கச்சேரியை அப்புறமா வெச்சுக்கலாம்ணே. இத்தனை வருசமா சினிமால இருக்கேன். ஆனா, யார்ட்ட எப்படிப் பழகுறதுனு நினைச்சுப் பார்த்தாலே பயமா இருக்கு. மக்களுக்கும் சொல்றேன், நம்ம்ம்...பிப் பழகிடாதீங்க!''

  ''நீங்க நடிக்காத இந்த பீரியட்ல ஏகப்பட்ட காமெடியன்கள்  வந்துட்டாங்களே... உங்களுக்கு யாரைப் பிடிச்சிருக்கு?''

  '''இவருக்குச் சிரிக்கக் கூடாது... அவருக்குச் சிரிக்கலாம்’னு எந்த நெனைப்பும் வெச்சுக்க மாட்டேன். நல்ல காமெடி யார் பண்ணாலும் சிரிப்பு வந்தா, சிரிச்சுத்தானே ஆகணும். ஒண்ணு ரெண்டு படங்கள்தாண்ணே பார்த்தேன். ஆனா, சிரிப்பு வரலை. முழுப் படத்தையும் உக்காந்து பாத்தா நம்ம தொழில எங்க மறந்திருவோமேனு பீதியா இருந்துச்சு. படம் பாக்குறதையே விட்டுட்டேன்.

  எப்பவுமே நம்ம உடம்பைக் கெடுக்கும் சாப்பாட்டைச் சாப்பிடக் கூடாது. உனக்கு கறி சோறு சேராதுனா, அப்புறம் எதுக்கு அதை வளைச்சுக் கட்டித் திங்குற? உசுருக்கும் மனசுக்கும் கெடுதலான எந்த விஷயத்தையும் நம்ம பக்கத்துலயே அண்டவிடக் கூடாதுண்ணே. காமெடிங்கிற பேர்ல கெட்டதைக் காட்டுனா அதை பொண்டு பொடுசு, புள்ளகுட்டிகளோட உக்காந்து பார்க்க முடியுமா? அந்தக் கண்றாவியைப் பார்த்தா நமக்கு பிரஷர்தான் ஏறும். தமிழ்நாட்டுல உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் நான் கெஞ்சிக் கேட்டுக்குறேன். உங்க வீட்டு ரேஷன் கார்டுல எம் பேரு இல்லையே தவிர, நானும் உங்க குடும்பத்துல ஒரு பயதான். கண்ட கருமத்தையும் பாத்து கண்ணையும் மனசையும் கெடுத்துகாதீங்க!''

  ''தமிழக முதல்வரைச் சந்திக்க உங்களுக்கு அப்பாயின்ட்மென்ட் கிடைச்சுதா?''

  ''ஏண்ணே... 'தமிழக முதல்வர்’ங்கிறது எவ்வளவு பெரிய பதவி. ஏழு கோடி மக்களை கட்டிக் காக்குறவங்க. அத்தனை பேரோட நல்லது கெட்டதுகளை முடிவெடுக்குறவங்க. அவங்களுக்குக் கட்டுப்பட்டவங்கதானே நான், நீங்க, எல்லாரும்! அவுக எப்பக் கூப்பிட்டாலும் போகாம, பார்க்காம இருக்க முடியுமா? முக்கியமான நபர்கிட்ட இருந்து சரியான தகவல் வந்தா, நான் போய்ப் பார்க்காமலா இருப்பேன்? ஆனா, நானா போய்ப் பார்க்கிறதுக்கு ஒரு காரணம் வேணும்ல! என்ன காரணம் சொல்லுவீங்க? 'தொழில் பண்றதைக் கெடுக்கிறாங்கம்மா... நடிக்க விடாமப் பண்றாங்கம்மா’னு சொல்லச் சொல்றீங்களா? நாலு சில்லறைப் பசங்க சேர்ந்து பண்ற விஷயத்தையெல்லாமா அவங்ககிட்ட கொண்டுபோறது? அவங்களுக்கு எவ்வளவு ஜோலி இருக்கும்? அதைப் பார்ப்பாங்களா, என்னைப் பார்த்து நலம் விசாரிச்சுட்டு இருப்பாங்களா? இருந்தாலும், என்னைய பத்தி அவங்களுக்கு நல்லா தெரியும்ண்ணே. நான் அவங்களை எம்.ஜி.ஆர். மாதிரிதாண்ணே பார்த்துட்டு இருக்கேன்!''

  ''அப்புறம்... என்ன திட்டம்?''

  ''ஏன்ன்ன்ன்..? நல்லாத்தானே போய்ட்டு இருந்துச்சு. நான் அந்தக் கடையை மூடி ரொம்ப நாளாச்சுண்ணே. இப்போதைக்கு தெனாலிராமன்தான் என் குழந்தை. அவனை கண்ணுங்கருத்துமா வளர்க்கிறது மட்டும்தான் என் வேலை. வீட்ல உக்காந்திருக்கிற பல்லு போன பாட்டியில இருந்து, பல்லு முளைக்காத குழந்தை வரை இது எல்லாரும் பார்க்கக்கூடிய படம். அண்ணன், தங்கச்சி, அக்கா, தம்பினு ஒருத்தருக்கு தெரியாம மத்தவங்க ஒளிஞ்சு பார்க்கிற சினிமா இல்லை. ஒட்டுமொத்தக் குடும்பமும் கொத்துக் கொத்தா, கும்பல் கும்பலா உக்காந்து பார்த்து கைதட்டி சிரிச்சு ரசிக்க வேண்டிய படம். இந்தத் தெனாலிராமனை நான் கும்பிடுற குலசாமி நல்லபடியா மக்கள்ட்ட கொண்டுபோய் சேர்ப்பார்ணே!''

   -----------------------------------------------

  Tamilus இன் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

  If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !


  Get in Touch With Us to Know More

  kindpng_1122282

  Brand-Center_-social-icons_join-us-community-icon_purple

  No comments

  Post Top Ad

  ad728

  Post Bottom Ad

  ad728