• Breaking News

  பேயர்ன் முனிச் அணி ‘சம்பியன்’

   


  ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்  போட்டியில் பேயர்ன் முனிச் அணிசம்பியன்பட்டத்தை கைப்பற்றியது. 

  கிளப் அணிகளுக்கான 65-வது ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் உதைபந்தாட்டப் போட்டி போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் நடந்தது. இதில்  நேற்று முன்தினம் நடந்த இறுதிப்போட்டியில் பேயர்ன் முனிச் (ஜேர்மனி)-பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பிரான்ஸ்) அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்கள் இன்றி அரங்கேறிய இந்த போட்டி தொடக்கம் முதலே விறுவிறுப்பாக இருந்தது. இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தாலும் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை.

  பந்தை அதிகம் (62 சதவீதம்) கட்டுப்பாட்டில் வைத்து இருந்த பேயர்ன் முனிச் அணி 59-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. அந்த அணி வீரர் ஜோசுவா கிம்மிச் கோல் எல்லையை நோக்கி தூக்கி அடித்த பந்தை சக வீரர் கிங்ஸ்லி கோமென் தலையால் முட்டி அற்புதமாக கோலாக்கினார். சாம்பியன்ஸ் லீக் போட்டி தொடரில் பேயர்ன் முனிச் பதிவு செய்த 500-வது கோல் இதுவாகும். பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் நட்சத்திர வீரர்களான நெய்மார், கைலியன் பாப்பே ஆகியோர் முதல் பாதியிலும், இரண்டாம் பாதியிலும் கோலை நோக்கி அடித்த சிறப்பான ஷாட்களை பேயர்ன் முனிச் கோல் கீப்பர் மானுவெல் நீயர் அருமையாக தடுத்து நிறுத்தி அணியின் வெற்றிக்கு அரணாக இருந்தார்.
  முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்த பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணி கோல் திருப்ப எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. முடிவில் பேயர்ன் முனிச் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பாரீஸ் செயின்ட் ஜெர்மைனை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை தனதாக்கியது.
  பேயர்ன் முனிச் அனைத்து ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக வெற்றி கண்டு மகுடத்தை கைப்பற்றி சாதனை படைத்தது. முதல்முறையாக கோப்பையை வெல்லும் தங்கள் அணியின் கனவு மயிரிழையில் கைநழுவி போனதால் நட்சத்திர வீரர் நெய்மார் கண்ணீர் மல்க சோகத்துடன் வெளியேறினார்.

  11-
  வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பேயர்ன் முனிச் வென்ற 6-வது சாம்பியன்ஸ் லீக் பட்டம் இதுவாகும். ஏற்கனவே 1974, 1975, 1976, 2001, 2013 ஆகிய ஆண்டுகளில் இந்த பட்டத்தை வென்று இருந்தது. பேயர்ன் முனிச் வீரர் ராபர்ட் லெவன்டவ்ஸ்கி இந்த சீசனில் மொத்தம் 15 கோல்கள் அடித்து அதிக கோல் அடித்தவருக்கான விருதை தட்டிச் சென்றார். இந்த சீசனில் பேயர்ன் முனிச் வென்ற 3-வது மகுடம் இதுவாகும். பன்டெஸ்லிகா, ஜெர்மன் கோப்பை போட்டிகளிலும் பட்டம் வென்று இருந்தது.


  வெற்றிக்கு பிறகு பேயர்ன் முனிச் அணியின் பயிற்சியாளர் ஹன்சி பிலிக் அளித்த பேட்டியில், ‘எங்கள் அணியை நினைத்து பெருமிதம் அடைகிறேன். கடந்த நவம்பர் மாதம் நான் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற போது அணி மோசமான நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. அதன் பிறகு அணியின் செயல்பாடுகளில் ஏற்பட்ட முன்னேற்றம் உணர்ச்சிகரமானது. ஒரு சீசனில் மூன்று பட்டங்களை வெல்வது எளிதான காரியமல்ல. அணியினரின் அற்புதமான கடின உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் கிடைத்த பலன் இதுவாகும்என்று தெரிவித்தார்.
  தோல்வி கண்ட பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் பயிற்சியாளர் தாமஸ் துசெல் கருத்து தெரிவிக்கையில், ‘தோல்வி வருத்தம் அளித்தாலும், அணியினரின் செயல்பாடு பெருமை அளிக்கிறது. நெய்மார் மனஉறுதியுடன் சிறப்பாக செயல்பட்டார். பெரிய காயம் காரணமாக பயிற்சிகளை அதிகம் தவறவிட்ட பாப்பே எங்களுடன் இணைந்து ஆடியது அதிசயம் எனலாம். கால்பந்தை பொறுத்தமட்டில் அதிர்ஷ்டம் மிகப்பெரிய பங்கு வகிக்கும் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும். எங்களுக்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதனை எங்களால் கோலாக்க முடியவில்லை. இதற்கு யாரேனும் ஒருவரின் தவறு காரணம் என்று சொல்ல முடியாதுஎன்றார்.

   

  கருத்துகள் இல்லை

  Post Top Ad

  Post Bottom Ad