• Breaking News

    ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம் - சிறப்பு பகிர்வு


    ஏ.ஆர்.ரஹ்மான், 1966ஜனவரி 6-ல் சென்னையில் பிறந்தார்.இவரின் அப்பா சேகர், பல்வேறு மலையாள, தமிழ்ப் படங்களின் இசைக் குழுவில் பணிபுரிந்து இருக்கிறார். ரொம்பக் குட்டிப் பையனாக இருக்கும்பொழுதே, அப்பாவின் அருகில் உட்கார்ந்து இசைக் கருவிகள் மற்றும் இசை அமைக்கும் விதம் ஆகியவற்றை அறிந்துகொண்டவர் ஏ.ஆர்.ரஹ்மான். அப்போது அவர் பெயர் திலீப் குமார்.
    • அப்பா தனியாக இசை அமைத்த முதல் மலையாளப் படம் வெளிவந்த நாளிலே, உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். குடும்பத்தைக் காக்க, பள்ளிப் படிப்பை பாதியில் முடித்துக்கொண்டு, முழு நேரம் இசை உலகிற்குள் நுழைந்தார் ரஹ்மான்.
    • எலெக்ட்ரானிக் பொருட்களின் மீது விருப்பம் அதிகம். கணினி பொறியியல் படிக்க வேண்டும் என்பது இளமைக்கால ஆசை.

    • பள்ளிக் கல்வி இல்லாமல் போனாலும், தனது இசைப் புலமையால்... லண்டன் இசைக்கல்லூரியான டிரினிட்டி கல்லூரியின் ஸ்காலர்ஷிப் பெற்றார்.
    • ஆரம்ப காலங்களில் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று தெரியாத காலங்களில் கார் ஒட்டவும் கற்றுக்கொண்டார். ஒருவேலை இசை கைகொடுக்காவிட்டால் டிரைவர் ஆகிவிடலாம் என்கிற எண்ணம் தான் காரணம்.

    • "பன்னிரெண்டு வயதில் முதுமையடைந்து விட்டேன் நான் ; இப்பொழுது தான் இளைஞனாகிக் கொண்டிருக்கிறேன் !" என்று பொறுப்புகள் அழுத்திய இளமைக்காலத்தை பற்றி குறிப்பிட்டார்
    • ஒரு லட்சம் பேர் கொல்கத்தாவில் இவரின் இசை நிகழ்வை காணக்கூடினார்கள். ரங்கீலா படத்தில் இசையமைத்த பொழுது தமிழர்கள் ஹிந்தியில் கோலோச்ச முடியாது என்பதை உடைத்து இவர் பெயர் வந்தாலே கைதட்டி கூத்தாடுகிற மாயத்தை அங்கே செய்தது அவரின் இசை.
    • இளம் வயதில் 'சினிமா பாரடைஸோ’ படத்தைப் பார்த்து, அந்தப் படத்தின் இசையைப் போல ஒரே ஒரு படத்திற்காவது இசை அமைக்க வேண்டும் என ஆசைப்பட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்.
    • பி.எம்.டபிள்யு கார்களில் விருப்பம் உண்டு. இசையமைப்பதை தாண்டி வீடியோ கேம்ஸ்களில் ஆர்வம் அதிகம்.

    • தொலைக்காட்சி விளம்பரப் படங்களுக்கு இசை அமைக்க ஆரம்பித்தார். அப்போதுதான், இயக்குனர்

    மணிரத்னம் மூலம் 'ரோஜா’ பட வாய்ப்பு வந்தது. அதற்காகக் கிடைத்த சம்பளம் 25 ஆயிரம்                    ரூபாய் மட்டுமே. அந்த பணத்தை சில மணிநேரங்களில் விளம்பரங்களில் ரஹ்மானால்                         சம்பாதித்திருக்க முடியும் என்றாலும் அற்புதமான வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார்.

    • சின்ன சின்ன ஆசை பாடலை இசையமைத்து அன்னையிடம் போட்டு காண்பித்தார். அவர் கண்ணீர் விட்டு அழுதார் ,"பிடிக்கலையா அம்மா ?" என்று கேட்டார் ரஹ்மான். பிடிக்கலையா அம்மா ?” என்று ரஹ்மான் அதிர்ந்து கேட்க ,”ரொம்ப நல்லா இருக்கு,என்னமோ பண்ணுது இந்த பாட்டு என்னை எல்லாருக்கும் இது பிடிக்கும் பாரு கண்டிப்பா !”என்று சொன்னார் அவரின் அம்மா
    •  "காதல் ரோஜாவே பாட்டை அதிகாலை மூன்று மணிக்கு கேட்டுவிட்டு சவுண்ட் இன்ஜினியர் கண்ணீர் விட்டு அழுதது மறக்கவே முடியாத அனுபவம் " என்றும் பதிவு செய்திருக்கிறார்
    • ரோஜா’ படத்துக்கு இந்தியாவின் சிறந்த இசை அமைப்பாளர் விருதை மத்திய அரசு வழங்கியது. அமெரிக்காவின் டைம் பத்திரிகை, கடந்த நூற்றாண்டின் உலகின் தலை சிறந்த 10 இசைக் கோர்வைகளில் ஒன்றாக 'ரோஜா’வை அறிவித்தது. 'மெட்ராஸின் மொசார்ட்’ எனவும் பட்டம் சூட்டியது.
    • 'பம்பாய்’ படத்தின் பாடல் கேசட்டுகள், அப்போதே 120 லட்சம் பிரதிகள் விற்றன. படத்தின் தீம் இசை, மூன்று வெவ்வேறு படங்களில் பயன்படுத்தப்பட்டது. இந்தச் சாதனை உலகின் வேறு எந்தப் படத்திற்கும் இல்லை.
    • 1997-ல் இந்தியாவின் விடுதலைப் பொன் விழாவுக்காக உலகப் புகழ் பெற்ற சோனி நிறுவனம், ரஹ்மானை ஒப்பந்தம் செய்தது. அப்படி உருவானதுதான் 'வந்தே மாதரம்’ இசை ஆல்பம்.
    • ரஹ்மானுக்கு பழையதை மறக்கிற பழக்கம் கிடையாது.எவ்வளவோ முன்னேறினாலும் தான் முதலில் உபயோகித்த கீபோர்டை இன்னமும் வைத்து இருக்கிறார் .இன்னமும் தன் பள்ளிக்கால நண்பர்களை சந்திக்கிற பழக்கம் உண்டு.
    • இளம் வயதில் வறுமையில் வாடிய நினைவுகளின் அடையாளமாக இன்னமும் தானாகநகைகளை அணிய மாட்டார்

    • ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுவதற்கு  முன் எப்படி உணர்கிறீர்கள் என கேட்டபொழுது "எனக்கொரு அன்னை இருக்கின்றாள்" என்றார்.அதாவது நான் இந்த விருதை வென்றாலும் அல்லது வெல்ல முடியாமல் போய் விட்டாலும் என் அன்னையின் அன்பு மாறப்போவது இல்லை .அது போதும் எனக்கு என்றார் ரஹ்மான்
    • 'அடுத்து ஆஸ்கர்தான்’ என 10 வருடங்களுக்கு முன்பே இயக்குனர் சுபாஷ் காய் சொன்னார். பிறகு, உலக அளவில் பம்பாய் ட்ரீம்ஸ் எனும் இசை நிகழ்ச்சி, மைக்கேல் ஜாக்சனோடு இணைந்து, 'மைக்கேல் ஜாக்சன் அண்ட் ஃப்ரெண்ட்ஸ்’, சீன மற்றும் பிரிட்டிஷ் படங்களுக்கு இசை எனப் பல வாய்ப்புகளை வெற்றிகளாக மாற்றினார். அப்படி வந்ததுதான், 'ஸ்லம்டாக் மில்லியனர்’. ஒரே ஒரு மின் அஞ்சலில் ரஹ்மானை புக் செய்தார், இயக்குனர் டோனி பாயல். 'ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்துக்கு ஆஸ்கர்கள் குவிய, 'எல்லாப் புகழும் இறைவனுக்கே’ எனப் பணிவோடு ஆஸ்கர் மேடையில் அன்னைத் தமிழில் பேசினார்.
    • அமைதி மற்றும் தனிமை விரும்பி. அமைதி ஆழ்மனதின் குரலை இன்னும் தெளிவாக கேட்க வைக்கிறது ; எரிச்சல்படுத்தும் சத்தம் உண்டு செய்யும் பலர் இருக்கும் உலகில் அமைதி தான் ஒரே இன்பம் என்பது ரஹ்மானின் எண்ணம்
    • 'வெறுப்புக்குப் பதிலாக நான் அன்பு வழியைத் தேர்ந்து எடுத்தேன்’ என்பார். எல்லோரையும் அன்பு செய்யுங்கள் எனும் சூஃபி தத்துவத்தில் ஈடுபாடுகொண்டவர். உலக அமைதிக்காக 'வி ஆர் தி வேர்ல்டு’ எனும் இசைப் பாடலை மைக்கேல் ஜாக்சன் இசை அமைக்கச் சொன்னார். அந்தப் பாடலைக் கேட்பதற்குள், அவர் மரணமடைந்தது சோகமான நிகழ்வு.
    • ரஹ்மான் நன்றாக மிமிக்ரி செய்வார், வைரமுத்து போல மிமிக்ரி செய்வதில் விருப்பம் அதிகம். பெரும்பாலும் இரவு நேரங்களில் இசை அமைப்பார். வீட்டில் பிள்ளைகள் தூங்கும் வரை அவர்களோடு இருந்துவிட்டு, பிறகு இசை அமைக்கப்போகிற ஸ்வீட் அப்பா. குழந்தைகள் மீது பெரிய அன்பு. ஒரு சுவாரசியமான செய்தி. இவருக்கும் மகன் அமீனுக்கும் ஒரே தேதியில்தான பிறந்த நாள்.
    • ரஹ்மான் லதா மங்கேஷ்கரின் பெரிய விசிறி. "லதாஜி என்னுடைய இசையமைப்பில் பாடினால் கேட்டுக்கொண்டே இருப்பேன் அது என்னுடைய இசை என்பதற்காக இல்லை ! அவர் பாடியிருக்கிறார் என்பதால் அதில் மூழ்கிப்போவேன்"  என்று சொன்னார்
    • இசையை... ஏழை மற்றும் திறமைசாலி மாணவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு, பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக இசைப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். ''இந்தப் பள்ளியில்தான் என் கனவுகள் உள்ளன. இங்கே இருந்து சிறந்த பல இளைஞர்கள் வரவேண்டும் என்பதே என் ஆசை'' என்பார்.

    • வெற்றியை தலைக்கு போகவிடமாட்டார். கொஞ்சம் புகழுடைய சாதாரண ,மனிதன் நான்

    என்பார். ஈகோ என்பதை 'edging god out !' என்று அர்த்தப்படுத்திக்கொள்கிறேன்.வெற்றி மட்டுமே படைப்புத்திறனுக்கு காரணமில்லை. இசையின் ஒருமுகம் மற்றும் அதன் மீதான காதல் தான் என்னை செலுத்துகிறது. இறைவனின் எல்லையற்ற கருணையும் நான் இயங்க முக்கிய காரணம் !" என்பது ரஹ்மானின் வாக்குமூலம்

     -----------------------------------------------

    Tamilus இன் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

    If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !


    Get in Touch With Us to Know More

    kindpng_1122282

    Brand-Center_-social-icons_join-us-community-icon_purple

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad