• Breaking News

    மோசடி மூலம் போட்டியில் முதலிடம் பெற்ற பாடசாலை - மிரட்டல் விடுக்கும் பணிப்பாளர் ராஜன்!

     


    மாகாண மட்ட ரீதியில் நடைபெற்ற பரதநாட்டிய போட்டியில் யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலையான உடுத்துறை மகாவித்தியாலயம் மோசடி செய்து முதலாவது இடத்தை பெற்றுக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர், தென்மராட்சி கல்வி வலயம் ஆகியவற்றுக்கு முறைப்பாடு செய்தும் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகின்றது.


    குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,


    மாகாண ரீதியிலான பரதநாட்டிய போட்டிகள் கடந்த 26ஆம் திகதி சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. அதில் திறந்த வயதுப் பிரிவில் தரம் 9 தொடக்கம் 13வரையான மாணவர்கள் பங்குபற்ற முடியும் என்று மாகாண கல்வித் திணைக்களம் சுற்று நிருபம் வெளியிட்டுள்ளது.


    இருப்பினும் உடுத்துறை மகா வித்தியாலயமானது தரம் 08இல் கல்வி பயிலும் மாணவி ஒருவரையும் குறித்த போட்டியில் இணைத்திருந்த நிலையில் அந்த பாடசாலை முதலாவது இடத்தையும், மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயம் இரண்டாவது இடத்தையும் பெற்றது.


    உடுத்துறை மகா வித்தியாலயம் மோசடி செய்து முதலாவது இடத்தை பெற்றதன் காரணமாக, மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயமே முதலாமிடம் என அறிவிக்கப்பட்டு, உடுத்துறை மகா வித்தியாலயமானது போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் பக்கச் சார்பு காரணமாக இவ்வாறு மோசடி இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.


    இது குறித்து வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண கல்வி திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு கடந்த 28ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்ட நிலையிலும் அவர்கள் அதில் அக்கறை செலுத்தவில்லை என பாதிக்கப்பட்ட மாணவர்களது பெற்றோர் தெரிவித்தனர்.


    இது குறித்து மாகாண கல்வி திணைக்களத்தினை தொடர்புகொண்டு கேட்டபோது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளமையை ஏற்றுக்கொண்டதுடன், உடுத்துறை மகா வித்தியாலயம் மீது விசாரணைகள் இடம்பெறுவதாகவும் கூறினர். அத்துடன் மேலதிக விபரங்களுக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திரு.பிரட்லீ அவர்களை அல்லது மாகாண கல்வித் திணைக்களத்தின் அழகியற்துறை உதவிப் பணிப்பாளர் திரு ராஜன் ஆகியோரை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் திரு.பிரட்லீ அவர்களை தொடர்புகொள்ள முயற்சித்தவேளை அவரது கைப்பேசி உறக்க நிலையிலும், திரு.ராஜன் அவர்கள் கைப்பேசிக்கு பதில் வழங்காத நிலையிலும் காணப்பட்டது.


    மாகாண கல்வி திணைக்களத்திடம் ஊடகவியலாளர் ஒருவர் குறித்த விடயங்கள் குறித்த தகவல்கள் பெற்ற நிலையில், உதவிப் பணிப்பாளர் திரு.ராஜன் அவர்கள் மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலய அதிபரை மிரட்டியதாகவும், உடுத்துறை மகா வித்தியாலயம் தான் போட்டியில் பங்குபற்ற முடியும் என தெரிவித்ததாகவும் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.


    அத்துடன் போட்டி நடைபெற்ற அன்றையதினம் மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலய மாணவர்கள் போட்டியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த வேளை திடீரென மின்சாரம் தடைப்பட்டதாகவும், போட்டியில் ஈடுபட்டு முடிந்த பின்னரே மின்சாரம் கிடைத்ததாகவும், ஆகையால் தங்களது போட்டியை மீண்டும் நடாத்துமாறு மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலய மாணவர்கள் கேட்டவேளை திரு.ராஜன் அவர்கள் குறித்த மாணவர்களையும் அவர்களது பெற்றோரையும் கடிந்து கொண்ட பின்னர் வற்புறுத்தலின் மத்தியிலேயே,க்ஷ கடிதத்தை பெற்றுவிட்டு மீண்டும் போட்டியில் ஈடுபட அனுமதித்ததாகவும் பெற்றோர் கூறுகின்றனர்.


    திரு.ராஜன் அவர்கள் உடுத்துறை மகாவித்தியாலயம் மீது தனிப்பட்ட செல்வாக்கினை காண்பிப்பதற்கான காரணம் என்ன என தெரியவில்லை என்றும், தமக்கு நீதி கிடைக்காவிட்டால், தமது பிள்ளைகள் தேசிய ரீதியிலான போட்டியில் பங்குபற்ற அனுமதி கிடைக்கா விட்டால் வடக்கு மாகாண கல்வி திணைக்களத்திற்கு முன்னால் போராட்டம் செய்யவுள்ளதாகவும் பெற்றோர் தெரிவித்தனர். தேசிய மட்ட போட்டிகள் நாளையதினம் திருகோணமலையில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad