• Breaking News

    நடால் நிகழ்த்திய மகத்தான சாதனைகள்


     

     

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் உலகின் 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் சாம்பியனானார். பிரெஞ்சு ஓபனில் இது அவரது 13-வது பட்டமாகும். ஒட்டுமொத்த கிராண்ட்ஸ்லாமில் இது அவரது 20-வது பட்டம்.

    உலகின் முதல்நிலை வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச்சை இறுதிச்சுற்றில் எதிர்கொண்ட நடால், 6-0, 6-2, 7-5 என்ற நோ் செட்களில் வெற்றி பெற்றார். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை முற்றிலுமாக நடாலிடம் இழந்த ஜோகோவிச், 2-வது செட்டை போராடி இழந்தார்.

    3-வது செட்டில் அவா் கடுமையாக சவால் அளித்தபோதும், சற்றும் விட்டுக்கொடுக்காமல் போராடி வென்றார் நடால். இந்த ஆட்டத்தை கடைசியாக ஒரு ஏஸ் விளாசி முடிவுக்கு கொண்டு வந்தார்.

    20-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற நடால், இதன்மூலம் நிகழ்த்திய மகத்தான சாதனைகள்:

    20

    நடால் இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். 1968-ல் ஓபன் எரா காலக்கட்டத்துக்குப் பிறகு அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரர்களில் ஃபெடரருடன் இணைந்து முதலிடத்தில் உள்ளார்

    அடுத்ததாக ஜோகோவிச் 17 பட்டங்களையும் பீட் சாம்பிராஸ் 14 பட்டங்களையும் வென்றுள்ளார்கள்.

    20 பட்டங்களை வென்றுள்ள டென்னிஸ் வீரர்கள் (ஆண் & பெண்)

    24 - மார்கரட் கோர்ட்
    23 -
    செரீனா வில்லியம்ஸ்
    22 -
    ஸ்டெபி கிராஃப்
    20 -
    ஃபெடரர்
    20 -
    நடால்

    26-0

    பிரெஞ்சு ஓபன் போட்டியில் அரையிறுதிச்சுற்றில் நுழைந்த பிறகு நடாலுக்குத் தோல்வியே ஏற்பட்டதில்லை. அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்களில் 26-0 என வெற்றிகளைக் கண்டுள்ளார்

    0 முதல் 20 வரை

    முதல்முறையாக ஃபெடரரின் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களின் எண்ணிக்கையைச் சமன் செய்துள்ளார் நடால். 2003-க்கு முன்பு வரை இருவரும் ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டமும் வென்றிருக்கவில்லை. 2003-ல் முதலில் விம்பிள்டன் பட்டம் வென்றார் ஃபெடரர். 2005-ல் பிரெஞ்சு ஓபன் போட்டியில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை நடால் வென்றார்.

    9

    கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றுகளில் ஃபெடரர், ஜோகோவிச்சுடன் தலா 9 முறை மோதியுள்ளார் நடால்

    13

    ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அதிகமுறை வென்றவர்களின் பட்டியலில் முதலிடம் நடாலுக்கு. 13 முறை பிரெஞ்சு ஓபன் பட்டங்களை அவர் வென்றுள்ளார். நவரத்திலோவா 9 முறையும் ஃபெடரர் 8 முறையும் விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ளார்கள்

    100

    நேற்று, தனது 100-வது வெற்றியை பிரெஞ்சு ஓபன் போட்டியில் பெற்றுள்ளார் நடால். இந்தப் போட்டியில் விளையாடிய 102 ஆட்டங்களில் 2-ல் மட்டுமே தோல்வியடைந்துள்ளார். ஃபெடரர் 102 வெற்றிகளை ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியிலும் 101 வெற்றிகளை விம்பிள்டனிலும் பெற்றுள்ளார்

    21

    1973-க்குப் பிறகு டென்னிஸில் தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது. இதில் நெ.1 வீரர்களை டூர் போட்டிகளில் 21 முறை வென்றுள்ளார் நடால். வேறு யாரும் இத்தனை முறை முதல் நிலை வீரர்களை வென்றதில்லை. அடுத்த இடத்தில் உள்ள பெக்கர், 19 முறை நெ.1 வீரர்களை வென்றுள்ளார்.

    6

    30 வயதுக்குப் பிறகு 6 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று ஜோகோவிச் சாதனையைச் சமன் செய்துள்ளார் நடால். ஃபெடரர் 4 பட்டங்களை வென்றுள்ளார்.

    4

    ஒரு செட் கூட தோற்காமல் 4 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை நடால் வென்றுள்ளார். இதற்கு முன்பு 2008, 2010, 2017 பிரெஞ்சு ஓபன் போட்டிகளிலும் இச்சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்

    86

    86 ஒற்றையர் பட்டங்களை நடால் வென்றுள்ளார். அதிகப் பட்டங்களை வென்ற வீரர்களின் பட்டியலில் நடாலுக்கு 4-ம் இடம்

    7

    நேற்றைய இறுதிச்சுற்றில் 7 கேம்களை மட்டுமே இழந்தார் நடால். இதற்கு முன்பு 2008-ல் ஃபெடரருக்கு எதிரான பிரெஞ்சு ஓபன் இறுதிச்சுற்றில் 5 கேம்களையும் 2017 பிரெஞ்சு ஓபன் போட்டியின் இறுதிச்சுற்றில் வாவ்ரிங்காவுக்கு எதிராக 6 கேம்களை மட்டுமே இழந்தார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad