• Breaking News

  அற்புதமான அவதாரங்களுக்கு சொந்தமானவருக்கு வயது ஐம்பத்தி எட்டு .


  களத்தூர் கண்ணம்மாவில் கையெடுத்துக் கும்பிட்ட சிறுவனை இன்று இந்திய சினிமா வணங்குகிறது. விஸ்வரூபமாய் தொடரும் தலைமுறைகளை வென்ற தனி அவதாரம் கமல்.

  முதல் படத்திலேயே (களத்தூர் கண்ணம்மா) சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதைப் பெற்றவர் கமல்!

  'களத்தூர் கண்ணம்மா', 'ஆனந்த ஜோதி', 'பார்த்தால் பசி தீரும்', 'பாதகாணிக்கை', 'வானம்பாடி' என 5 படங்களில் நடித்த பிறகு,அவ்வை டி.கே.சண்முகத்திடம் சேர்ந்தார் கமல். அவர் வேறு திசைக்குப் பயணப்பட்டது அதற்குப் பிறகுதான்!

  களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானாலும்கூட, தனது குழந்தைப் பருவத்து நடிப்பில்,பெரிய நடிகர்கள் யாருக்கும் மாஸ்டர் கேரக்டரில் கமல் நடித்ததே இல்லை!

  கமல் நடித்த படங்களைப் பாராட்டி பாலசந்தர் எழுதும்போது 'மை டியர் ராஸ்கல்' என்றுதான் அழைப்பார்!

  கமலின் தந்தை உடல் தகனத்துக்காக மயானத்தில் வைக்கப்பட்டு இருந்தது.சாருஹாசன், சந்திரஹாசன், கமல் மூவரும் சிதையின் அருகில் நிற்க, திரும்பிப் பார்த்த கமல் 'அண்ணா, நீங்களும் வாங்க' என இருவரை அழைத்தார். அவர்கள் ஆர்.சி.சக்தி, ஸ்டன்ட் மாஸ்டர் கிருபா. கதறித் துடித்தபடி அவர்களும் கொள்ளிவைத்தனர்!


  ஃபிலிம்ஃபேர் விருதை 18 முறைக்கு மேல் வாங்கிய ஒரே இந்திய நடிகர் கமல்தான்!

  எண்பதுகளின் மத்தியில் 'மய்யம்' என்ற இலக்கியப் பத்திரிகையைக் கொஞ்ச காலம் நடத்தினார் கமல்!

  எம்.ஜி.ஆருக்கு 'நான் ஏன் பிறந்தேன்', சிவாஜிக்கு 'சவாலே சமாளி',ஜெயலலிதாவுக்கு 'அன்புத்தங்கை' படங்களில் டான்ஸ் மாஸ்டராகப் பணியாற்றி இருக்கிறார் கமல்!

  ஆரம்பத்தில் 'சிவாலயா' என்ற நடனக் குழுவை ஆரம்பித்து நடத்தினார் கமல்.அதற்குப் பிறகுதான் நடன உதவியாளராக தங்கப்பனிடம் சேர்ந்தார்!

  ஆர்.சி.சக்தியின் இயக்கத்தில் வந்த 'உணர்ச்சிகள்'தான் கமலைத் தனிகதாநாயகனாக ஆக்கியது. ஆனால், முந்திக்கொண்டு வெளிவந்த படம்'பட்டாம்பூச்சி'!

  'நினைத்தாலே இனிக்கும்' படம்தான் கமலும் ரஜினியும் சேர்ந்து நடித்த கடைசிப் படம்!

  கமல் ரொம்பவும் ஆசைப்பட்டு, முற்றுப்பெறாத கனவுகளில் ஒன்று...'மருதநாயகம்'!

  கடவுள் மறுப்புக்கொள்கையைக் கொண்டவர் என்றாலும், ஆத்திகத்தை கமல்விமர்சனம் செய்வதில்லை!

  தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி,பெங்காலி மொழிப் படங்களில் நடித்திருக்கிற ஒரே தமிழ் நடிகர் கமல்தான்!

  தன் உடலைத் தானம் செய்திருக்கிறார் கமல். சினிமாவில் இத்தகைய முன் மாதிரி இவர்தான்!

  கமலுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர்கள் இரண்டு பேர். ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா!

  கமல், சாருஹாசன், சுஹாசினி என அவரது குடும்பத்தில் இருந்தே மூன்று பேர் தேசிய விருது பெற்றிருக்கிறார்கள்!

  'ராஜபார்வை' முதல் தம்பியுடன் இருந்து அலுவலகத்தைக் கவனிக்கிறார் அண்ணன் சந்திரஹாசன். கல்லாப்பெட்டி அவரது கவனத்தில்தான் இருக்கிறது!

  ஏதோ மன வருத்தம்... சாருஹாசனும் கமலும் இப்போதும் பேசிக்கொள்வதுஇல்லை!

  பிரசாத் ஸ்டுடியோவில் அகேலா கிரேன் இறக்குமதி ஆகியிருந்தது. அதை இரவோடு இரவாகச் சென்று பார்த்த முதல் நபர் கமல். பிறகுதான் பி.சி.ஸ்ரீராம் போன்றவர்கள் வந்து பார்த்தார்கள். தொழில்நுட்பத்தின் மீதுகொண்ட தீராத ஆர்வம்தான் காரணம்!

  வீட்டில் நிறைய நாய்களை வளர்க்கிறார். கொஞ்ச காலத்துக்கு முன்பு இறந்துபோன நாய்க்காகக் கண்ணீர்விட்ட தருணங்களும் உண்டு!

  'ஹே ராம்' படம் முதல் டைரக்ஷனாக வெளிவந்தாலும், முன்னமே 'சங்கர்லால்'படத்தை, டி.என்.பாலு இறந்து போக, முக்கால்வாசிக்கு மேல் இயக்கியிருக்கிறார்!  கமல் மிகவும் ஆத்மார்த்தமாக நேசித்த மனிதர் மறைந்த அனந்து. தன்னை வேறு தளத்துக்கு அழைத்து வந்த நண்பர் என்ற அன்பு அவர் நெஞ்சு நிறைய உண்டு!

  அதிஅற்புதமான உலக சினிமாக்களின் டி.வி.டி. அணிவகுப்பு கமலின் ஹோம் தியேட்டர் கலெக்ஷனில் இருக்கிறது!

  பட்டு வேட்டி பிடிக்கும். தழையத் தழையக் கட்டிக்கொண்டு ஆபீஸ் வந்தால், அன்று முழுக்க உற்சாக மூடில் இருப்பார்!

  தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், பெங்காலி,கன்னடம், பிரெஞ்சு என எட்டு மொழிகள் கைவந்த வித்தகர்!

  ரஜினிக்குப் பிடித்த படமான 'முள்ளும் மலரும்' படம் வெளியாவதற்குக் காரணமாக இருந்தவரே கமல்தான்!

  'உங்களது படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது?' என்று கேட்டால், 'நான் நடிக்கப் போகும் எனது அடுத்த படம்' என்பார்.

  கமல் மெட்ராஸ் பாஷை பேசிய 'சட்டம் என் கையில்', 'அபூர்வ சகோதரர்கள்'ஆகிய படங்கள் மெகா ஹிட். மெட்ராஸ் பாஷைக்கு கமலின் குரு லூஸ் மோகன்!


  'சட்டம் என் கையில்' படம்தான் கமல் இரட்டை வேடங்களில் நடித்த முதல் படம் என்பது பலரும் சொல்லும் தகவல். ஆனால், அவர் 'பார்த்தால் பசி தீரும்'படத்திலேயே சின்ன வயதில் டபுள் ரோல் பண்ணியிருக்கிறார்!

  ஊர்வன, பறப்பன, ஓடுவன என அனைத்தையும் சாப்பிடும் அசைவப் பிரியர் கமல். ஆக்டோபஸை எவ்வாறு பிடித்து, சமைத்துச் சாப்பிடுவது என்பதை நடித்தே காட்டுவாராம். அந்த நடிப்பிலேயே எதிரே உள்ளவர்கள் பசியாறி விடுவார்களாம்!

  ஆஸ்கர் விருது பெற்ற 'டிராஃபிக்' படத்தை இயக்கிய ஹாலிவுட் இயக்குநர்ஸ்டீபன் சோடர்பெர்க்கைப் போன்று ஒரு ஸ்டெடிகேம் கேமராவை இடுப்பில் கட்டி, லென்ஸைத் தன்னை நோக்கித் திருப்பிக்கொண்டு 'சிங்கிள்மேன் யூனிட்'டாக ஒரு படத்தை இயக்கி நடிப்பது கமலின் நீண்ட நாள் ஆசை!

  நடிகர் நாகேசுக்கும் கமலுக்குமான உறவு 'அப்பா-மகன்' உறவு போன்றது. தன்னை 'கமல்ஜி' என்று நாகேஷ் அழைக்கும்போது, 'எதுக்கு அந்த ஜி' என்ற கமலிடம், 'கமலுக்குள்ள ஒரு நாகேஷ் இருக்கலாம். ஆனால், நாகேசுக்குள்ள ஒரு கமல் இருக்க வாய்ப்பே இல்லை' என்பாராம் நாகேஷ்!  கமலுக்கு சினிமா சென்டிமென்ட்களில் துளியும் நம்பிக்கை கிடையாது. 'ஹே ராம்' படத்தின் முதல்வசனமே இப்படித்தான் இருக்கும்... 'சாகேத்ராம் திஸ் இஸ் பேக்-அப் டைம்'!

  நல்ல மூடு இருந்தால், நண்பர்களிடம் தன் கவிதைகளை வாசித்துக் காட்டுவார். விரல் ஜாலங்களை, குரல் ஜாலங்களுடன் கேட்கக் கிடைத்தவர்கள் பாக்கியவான்கள்.இருந்தும் ஏனோ, இன்னமும் தொகுப்புகளாக வெளியிடாமல் தாமதிக்கிறார் கமல்!

  ''சந்திக்கும் மனிதர்களின் பேச்சுக்களை, நடவடிக்கைகளை நகலெடுப்பது போல்கவனிக்கும் ஆற்றல் எனக்குத் தெரிந்து சிலருக்கே உண்டு. இந்த ஆற்றல்கைவரப்பெற்றவர்கள் வரிசையில் முக்கியமான இடம் கமலுக்கு உண்டு''என்கிறார் யூகி சேது!

  'மர்மயோகி'யில் கமல் ஒரு அகோரி கேரக்டர் செய்வதாக இருந்தார். கொஞ்சகாலத்துக்கு முன்பு நீண்ட தாடி வளர்த்தது அதற்காகத்தான். 'சாமா சானம்' என்றுதொடங்கும் பாடல் ஒன்றைக்கூட இதற்காகத் தயார் செய்துவைத்திருந்தார்.'மர்மயோகி' டிராப் என்றவுடன் தாடியை எடுத்துவிட்டார்!

  நன்றாகத் தமிழ் பேசும் ஹீரோயின்களை கமலுக்கு மிகப் பிடிக்கும். தமிழ்க் கதாநாயகிகள் அதிகம்வருவதில்லை என்ற வருத்தமும் அவருக்கு உண்டு. அதனால்தான் அபிராமியையும் சினேகாவையும்அழைத்துத் தன் படங்களில் வாய்ப்பு கொடுத்தார்!

  'காலையில் எழுந்ததும் யார் முகத்தில் விழிக்க விருப்பம்?' என்று கமல் முன்பு நடத்திய 'மய்யம்'பத்திரிகையில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. கமல் சொன்ன பதில், 'காட்டில் இருந்தால் நரி முகத்தில்,கட்டிலில் இருந்தால் ஸ்த்ரீ முகத்தில்'!

  பாபர் மசூதி இடிப்பின்போது யதேச்சையாக டெல்லியில் இருந்தார் கமல். விஷயம் கேள்விப்பட்டதும் உடனடியாக அப்போதைய பிரதமர் நரசிம்மராவைச் சந்தித்து, தமிழ் திரையுலகம் சார்பாக எதிர்ப்பைப் பதிவு செய்தார். பாபர் மசூதி இடிப்புக்கு எதிராக சினிமா உலகில் இருந்து முதன்முதலில் எழுந்த எதிர்க்குரல் கமலுடையது!

  முட்டையின் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு வெள்ளைக்கருவில் மிளகுப்பொடி தூவிச் சாப்பிடுவது கமலுக்குப் பிடித்தமானது. கூடவே பிளாக் டீ!

  4 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் டி.வி-யில் கமலின் பிறந்த நாளுக்காகப் புகழ்பெற்ற கவிஞர்களை அழைத்து ஒரு கவியரங்கம் நடத்தினார்கள். ஒரு நடிகரைப் பாட்டுடைத் தலைவனாக வைத்து நடத்தப்பட்ட முதல் கவியரங்கம் அதுதான்!

  'ஆளவந்தான்' ரிலீஸின்போது, 'இனிமேல் 100 நாட்கள் எல்லாம் படம் ஓடாது. சினிமா பார்ப்பது வாழைப்பழம் சாப்பிடுவது மாதிரி. சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டால் அருகில் உள்ள பெட்டிக் கடையில் வாழைப்பழம் கிடைக்க வேண்டும்' என்று சொல்லி, அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்யும் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியவர்கமல்தான்!

  'யாரையாவது டின்னருக்கு அழைக்க வேண்டும் என்றால் யாரை அழைப்பீர்கள்?'என்று ஒருமுறை கமலிடம் கேட்கப்பட்டபோது, 'காந்தியடிகளை டின்னருக்கு அழைத்து, ஆட்டுப் பாலும் நிலக்கடலையும் பரிமாற விருப்பம்' என்று பதில் சொன்னார்!
  'நாகேஷ், தன்னுடைய திரையுலக காமெடி வாரிசை உருவாக்காமல் போய்விட்டார். அந்தத் தவறை நானும் செய்ய மாட்டேன்!' அண்மையில் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை நடத்துவதற்கான காரணமாக நண்பர்களிடம் கமல் பகிர்ந்து கொண்டது இது!

  சென்னை புறநகரில் ஒரு மல்டிப்ளெக்ஸ் கட்டுவதற்காக கமல் இடம்வாங்கிப்போட்டிருக்கிறார். அனைத்துவிதமான தொழில் நுட்பங்களுடன் கூடிய சினிமா தியேட்டர்களும், கேளிக்கை பூங்காக்களும், ரெஸ்டாரென்ட்டுகளும் அங்கு இருக்கும்!

  தமிழ் சினிமாவை 'கோலிவுட்' என்று பலரும் சொன்னாலும் கமல் அந்த வார்த்தையை உச்சரிக்க மாட்டார். அப்படிச் சொல்லவேண்டாம் என மேடைகளிலும் சொல்லியிருக்கிறார். தமிழ்த் திரையுலகம் என்று அழுத்தி உச்சரிப்பதே அவரது ஸ்டைல்!

  வீட்டில் நான்கு கார்களை வைத்திருக்கும் கமல்ஹாசன் புதிதாக ஹம்மர் ஹெச்2 என்னும் காரை 1.8 கோடி ரூபாய் விலையில் வாங்கியிருக்கிறார். இது ஸ்டாலின் வைத்திருக்கும் ஹம்மர் ஹெச்3 காரைவிட காஸ்ட்லி!

  'உனக்குள்ள நடமாடிக்கிட்டு இருக்குற மிருகம்தான் எனக்குள்ள தூங்கிக்கிட்டு இருக்கு', 'போங்கடா... போய் புள்ள குட்டிங்களைப் படிக்க வைங்கடா', 'வீரம்னா என்ன தெரியுமா..? பயம் இல்லாதது மாதிரி நடிக்கிறது', 'ஓநாயா இருந்து பார்த்தாதான் அதோட நியாயம் என்னான்னு தெரியும்', 'சந்தோஷம்னா என்னன்னு அதை அனுபவிக்கும்போது யாருக்கும் தெரியுறதில்லை', 'மன்னிக்கிறவன் மனுஷன்,மன்னிப்புக் கேட்கிறவன் பெரிய மனுஷன்' - இவை எல்லாம் வசனகர்த்தா கமல் எழுதிய புகழ்பெற்ற வசனங்கள்!
  கருத்துகள் இல்லை

  Post Top Ad

  Post Bottom Ad