அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பில் ஜோ பிடன் முன்னிலை
அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களம் இறக்கப்பட்டு உள்ளார். அங்கு நடைபெற்ற கருத்துக் கணிப்பில் ஜொ பிடன் முன்னிலையில் உள்ளார்.
இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் இரு கட்சிகளுக்கும் ஆதரவில்லாமல் தொங்கு மாகாணங்களாக அறியப்படும் அரிசோனா, புளோரிடா, மிச்சிகன், வடக்கு கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை, சியானா கல்லூரி ஆகியன கருத்துக்கணிப்பு நடத்தின.
கடந்த 8ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் மேற்கூறிய 6 மாகாணங்களிலும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் ட்ரம்பை பின்னுக்கு தள்ளி முன்னிலையில் உள்ளார்.
ஒவ்வொரு மாகாணத்திலும் ஜோ பிடன், டிரம்பை விட 6 புள்ளிகளுக்கும் மேலாக பெற்று முன்னிலையில் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் அமெரிக்காவில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ட்ரம்பும் ஜோ பிடனும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை