கோட்டாபயவை குறுக்கு விசாரணை செய்தேன் - ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா
பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நீதிமன்றில் வைத்து தான் குறுக்கு விசாரணை செய்ததாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
தனியார ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போது கூட பலர் அவரை அச்ச உணர்வுடனேயே பார்த்த காலப்பகுதி. அப்போது நீங்கள் ஒரு பிரதானமான வழக்கை இலங்கையிலே கையாண்டிருந்தீர்கள். அதில் கிட்டதட்ட ஆறு வழக்கறிஞர் குழாம் ஈடுபட்டிருந்தார்கள். அதில் நீங்களும் ஒருவர். ஐவர் தாமாகவே அதிலிருந்து விலகிக் கொண்டார்கள் குறுக்கு விசாரணை செய்த போது. தற்போதைய ஜனாதிபதி அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை விசாரணை செய்த அந்த நாட்களை இன்று நீங்கள் நினைத்துப் பார்ப்பதுண்டா? என எழுப்பப்பட்ட கேளவிக்கு அவர் பதிலளிக்கையில்,
அந்த நாட்களை நான் நினைத்துப் பார்ப்பதுண்டு. ஏனென்றால் முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக பித்தளை சந்தியிலே கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு ஆறு சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் இரண்டு பேருக்கு எதிராக நான் ஆஜராகினேன். இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் சாட்சியாக நீதிமன்றத்திற்கு வந்தார்.
அவர் வரும் போது இப்போதைய நீதியமைச்சர் அலி சப்றியையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தார். அரச தரப்பினால் சாட்சியத்தை நெறிப்படுத்திய பிறகு கேட்கப்பட்டது எதிர்த்தரப்பு குறுக்கு விசாரணை செய்கிறீர்களா என்று.
ஆனால் ஒருவரும் குறுக்கு விசாரணை செய்வதற்கு தயாராக இல்லை. அது தான் நான் அவரை குறுக்கு விசாரணை செய்தேன் என குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை