• Breaking News

    நஜிப்பைப் போலவே விசாரணை கோரும் அன்வர்

      டாக்டர் மகாதீர் முகம்மது மலேசியாவின் பிரதமராக இருந்தபோது 1990களில் நிகழ்ந்த ஃபோரெக்ஸ் மோசடியின் காரணமாக மத்திய வங்கி ஏறத்தாழ 30 பில்லியன் ரிங்கிட் இழந்தது.

    இந்த மோசடி தொடர்பான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மலேசியாவின் முன்னாள் பிரதமரும் 1எம்டிபி மோசடி தொடர்பான வழக்குகளை எதிர்நோக்குபவருமான நஜிப் ரசாக் அழைப்பு விடுத்துள்ளார்.

    இந்நிலையில், நஜிப் விடுக்கும் அழைப்பைத் தாம் வரவேற்பதாக கெஅடிலான் கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம் தெரிவித்திருப்பது மலேசிய அரசியல் வட்டாரத்தில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. மலேசியாவின் எதிர்க்கட்சிக் கூட்டணியின் தலைவராவதற்கு  அன்வருக்கும் டாக்டர் மகாதீருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

    1990களில் ஃபோரெக்ஸ் மோசடி நிகழ்ந்தபோது மலேசியாவின் நிதி அமைச்சராக  அன்வர் பதவி வதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மோசடி குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்துவதில் தமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்றார் அவர்.

    அதிகாரிகள் அந்த மோசடி குறித்து விசாரணை நடத்தலாம். ஆனால் நான் ஒரு காசும் திருடவில்லை என்பது அனைவருக்கும் தெரிய வேண்டும். நான் ஒரு பில்லியன் ரிங்கிட் கையாடவில்லை. மரக்காடுகளை அபகரிக்கவில்லை. பங்குச் சந்தை பங்குகளை எடுத்து கொள்ளவில்லை. அதுதான் முக்கியம்.

    எனவே, ஃபோரெக்ஸ் மோசடி அல்லது 1எம்டிபி தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றால் அதைத் தாராளமாக செய்யுங்கள்,” என்று   அன்வர் கூறினார்.

    கடந்த சனிக்கிழமையன்று எவருடைய பெயரையும் குறிப்பிடாமலும் குற்றம் சுமத்தாமலும் விசாரணைக்கு நஜிப் கோரியது குறித்து  அன்வர் பாராட்டு தெரிவித்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

     அன்வரின் இந்தச் செயலால் எதிர்க்கட்சிக் கூட்டணியில் இருக்கும் விரிசல் மேலும் மோசமடையும் என்று நம்பப்படுகிறது.

    மலேசியப் பிரதமர் முகைதீன் யாசினின் தலைமையில் இருக்கும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியிடமிருந்து அதிகாரத்தைப் பறித்து மீண்டும் ஆட்சி அமைக்க பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி முயன்று வருகிறது. இந்நிலையில், பக்கத்தான் ஹரப்பானின் தலைமைப் பொறுப்புக்காக டாக்டர் மகாதீருக்கும்   அன்வருக்கும் இடையே கசப்பான போட்டி நடந்து வருகிறது.

    கடந்த பிப்ரவரி மாதத்தில் பக்கத்தான் ஹரப்பானைச் சேர்ந்த கிட்டத்தட்ட 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவியதும்   முகைதீன் தலைமையிலான கூட்டணி ஆட்சியைப் பிடித்தது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad