• Breaking News

    சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து ஹொங்கொங்கில் போராட்டம்



    சீனாவின் நேரடி கட்டுபாட்டில் இருக்கும் ஹொங்கொங்கில் ஜனநாயகத்துக்கு ஆதரவாக நீண்ட காலமாக போராட்டங்கள் நடைபெற்று வந்தன. ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்தியும் சீனாவுக்கு ஆதரவான  ஹொங்கொங் அரசு பதவி விலக வலியுறுத்தியும் இந்த போராட்டங்கள் நடந்தன.

    இந்தச் சூழலில், ஹொங்கொங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு நாடுகடத்த வகை செய்யும் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நகரில் கடந்த ஆண்டு ஜூன் மாத தொடக்கத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. சுமார் 6 மாதம் நீடித்த இந்தப் போராட்டத்தின்போது வன்முறை சம்பவங்களும் நடைபெற்றன. கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராகத் தொடங்கிய இந்த ஆர்ப்பாட்டங்கள், சீன ஆளுகைக்கு எதிரான போராட்டமாக உருவெடுத்தது.

    இந்த போராட்டங்களை இங்கிலாந்து தூண்டிவிடுவதாக சீனா பல முறை குற்றம் சாட்டியது. மேலும், போராட்டங்களின்போது நடந்த வன்முறைச் சம்பவங்களை பயங்கரவாதத்துடன் சீன அரசு ஒப்பிட்டுப் பேசியது. இந்த நிலையில் ஹொங்கொங்கின்  சட்ட மற்றும் ஆட்சியமைப்பில் மாற்றங்கள் செய்வதற்கான, சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு மசோதா சீனா நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

      தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த தயாராகும் சீனாவின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹொங்கொங்கில் நேற்று போராட்டம் வெடித்தது. ஹொங்கொங்கின் முக்கிய வீதிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    பல இடங்களில் ஜனநாயக ஆர்வலர்கள் பிரமாண்ட பேரணி நடத்தினர். அவர்கள் சீனாவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.

    மேலும் சீன அரசை கண்டித்தும், ஹொங்கொங் அரசு பதவி விலக வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பியபடி சென்றனர். போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முக கவசம் அணிந்திருந்தனர்.

    எனினும் சமூக இடைவெளியை மறந்தும், அரசின் உத்தரவை மீறியும் பொது இடத்தில் மக்கள் கூட்டமாக கூடியதால் போராட்டத்தை கைவிட்டுவிட்டு கலைந்து செல்லும்படி  பொலிஸார்  எச்சரித்தனர்.

    ஆனால் போராட்டக்காரர்கள் அதனை ஏற்க மறுத்து தொடர்ந்து பேரணியாக சென்றனர். அதனை தொடர்ந்து போராட்டக்காரர்களை விரட்டியடிக்க  பொலிஸார் ர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி எறிந்தனர். பெப்பர் ஸ்பிரேஅடித்தனர். இதனால் போராட்டக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் பலர் தடுமாறி கீழே விழுந்ததில் காயம் அடைந்தனர். அவர்களை சக போராட்டக்காரர்கள் தூக்கி சென்று பொலிஸிடம் இருந்து காப்பாற்றினர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad