• Breaking News

    பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி, பிரதேச சபை உறுப்பினர் இலங்கேஷ்வரனால் சபையில் பிரேரணை முன்வைப்பு!

     


    பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரிய பிரேரணை இன்றைய தினம் அராலி 13ம் வட்டார உறுப்பினர் இலங்கேஸ்வரனால் வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அப் பிரேரணையில் உள்ளதாவது,


    பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரும் பிரேரணை இந்த நாட்டில் உள்ள 1979 ம் ஆண்டில் 8 ம் இலக்க பயங்கரவாத தடைச்சட்டம் மனித குலத்திற்கு எதிரான அநீதியாகும். 1979 ம் ஆண்டில் தற்காலிகமாக ஆறுமாத காலத்திற்கு மட்டும் செல்லுபடியாகும் முகமாக கொண்டு கொண்டு வரப்பட்ட இச்சட்டம் இன்றுவரை 42 ஆண்டுகளக நீடித்து வருகிறது.


    இச்சட்டத்தின் விதிகள் நமது நாட்டின் குற்றவியல் சட்டத்தின் அடிப்படை மூலாதாரங்களிற்கு முற்றிலும் எதிரானது. ஒப்புதல் வாக்குமூலங்கள் தடுப்புக்காவல் மற்றும் பினையில்லாத காவலில் வைத்தல் ஆகியவை சித்திரவதைகளை அதிகரிக்கும் ஆபத்தான விதிகளாகும்.


    நாட்டின் பாதுகாப்பிற்கானது என்ற போர்வையில் அமுலாக்கப்பட்ட இச்சட்டம் நீண்டகாலமாக உரிமைக்காக போராடும் தமிழினத்தை குறிவைத்து பாயவிடப்பட்டு வருகிறது.


    இதன்மூலம் எண்ணற்ற தமிழ் இளைஞர் யுவதிகள் தமது எதிர்காலத்தை முற்றாக இழந்து போயுள்ளனர். உரிமைக்கான போரை பயங்கரவாதமாக சித்தரித்து அதனை வெற்றிகொண்டதாக இருமாப்பு கொள்ளும் இந்த அரசு தொடர்ந்து இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தவதன் உள்நோக்கம் என்ன?

    பயங்கரவாதத்திற்கெதிரானதாக கொண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசியல் பழிவாங்கல்களிற்காக பயன்படுத்துவது அடிப்படை மனித உரிமைமீறலாகும்.


    இக்கொடுமை அரசியலோடு நின்று விடாது பொருளாதாரம் மதம் சமூகம் என அனைத்துத் துறைகளுக்கும் ஊடுருவி நாடு முழுவதையும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இச் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கான அடிப்படை சூழல் இல்லாத பொழுதிலும் இச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது கடும் கண்டனத்துக்குரியதாகும்.


    எனவே இச் சட்டத்தை முழுமையாக நீக்க கோரி இப் பிரேரணை சபையில் சமர்ப்பிக்கின்றேன் – என்றுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad