சுழிபுரத்தில் கசிப்பு உற்பத்தியை முற்றுகையிட சென்ற பொலிஸார் மீது தாக்குதல்! இருவர் கைது
சுழிபுரத்தில் உள்ள கசிப்பு உற்பத்தி செய்யும் இடத்தினை முற்றுகையிடச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவது,
இன்று, (2021.07.11) வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம்-வறுத்தோலை பகுதியில் கசிப்பு உற்பத்தியும் வியாபாரமும் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தைள்ளது.
அதனைத் தொடர்ந்து பொலிஸார் அவ்விடத்திற்கு சென்றனர். இந்த நிலையில் குறித்த வீட்டு பெண்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
இதன்போது அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் இளைஞன் ஒருவர் அவ்விடத்திற்கு வந்தபோது, வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்கள் அந்த இளைஞன் தான் தங்களது வியாபாரம் தொடர்பான தகவலை பொலிஸாருக்கு வழங்கியதாக தெரிவித்து பொலிஸாருக்கு முன்னால் அந்த இளைஞனை கொட்டனால் தாக்கினர். இதனால் காயமடைந்த அந்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த சம்பவத்தில் ஈடுபட்ட பெண்களை பொலிஸார் கைது செய்ய முற்பட்டபோது அவர்களது உறவினரான அயல் வீட்டில் வசிக்கும் ஆண் ஒருவரும் பெண்களும் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டனர்.
இதன்போது அந்த ஆணும், இளைஞனை தாக்கிய பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த பெண்ணின் வீட்டில் இருந்து 40 லீட்டர்கள் கோடாவும் ஒரு லீட்டர் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள ஆண் இரண்டு வருடங்களுக்கு முதலும் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமைக்காக நீதிமன்றினால் தண்டிக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை