3 மனைவிகளை விபசாரத்தில் தள்ளிய காதல் மன்னன், சென்னையில் கைது
காதலித்து மணந்த மனைவிகளை, விபசாரத்தில் தள்ளி பணம் சம்பாதித்த காதல் மன்னன் கைது செய்யப்பட்டார். 2 மனைவிகள் மீட்கப்பட்டு, அரசு விடுதியில் சேர்க்கப்பட்டனர்.
காதல் மன்னன் ராஜன்
கைது செய்யப்பட்ட காதல் மன்னன் பெயர் ராஜன் (வயது 26). இவரது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி. கார் டிரைவராக சென்னையில் தொழில் செய்துவந்த ராஜன், பணத்தாசையால், தனது வாழ்க்கை பாதையை மாற்றினார்.
அழகிய இளம்பெண்களுக்கு காதல் வலை வீசி விழவைப்பார். பின்னர் அந்த இளம்பெண்களை வீட்டை விட்டு கடத்தி வந்து ரகசிய திருமணம் செய்துகொள்வார். சில காலம் குடும்பம் நடத்துவார்.
ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்ற பாணியில் குடும்ப வாழ்க்கையை அனுபவித்துவிட்டு, பின்னர் அந்த இளம்பெண்களை தனது ஆசை மனைவி என்று கூட பார்க்காமல் மிரட்டி விபசாரத்தில் தள்ளுவார். இதுதான், காதல் மன்னன் ராஜனின் திருமண மோசடி ஸ்டைல்.
ஒவ்வொருமுறையும் தனது காதல், திருமண விளையாட்டை தொடங்கும்போதும், தனது பெயரை மாற்றிக்கொள்வார். ராஜன் என்ற பெயரோடு, ராமராஜன், மணி என்ற வேறு பெயர்களும் உண்டு. இவர் மீது, விபசார வழக்குகள் மூன்று உள்ளது. ஆனால் போலீஸ் கையில் சிக்காமல், தலைமறைவாக வாழ்ந்தார்.
ஆந்திர இளம்பெண்கள்
இவரால் காதல் வலையில் வீழ்த்தப்பட்டு, விபசாரத்தில் தள்ளப்பட்டு வாழ்க்கையை தொலைத்த 3 இளம்பெண்களும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். காதல் மன்னன் ராஜனை கைது செய்து, அவரது காதல் திருமண மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி கமிஷனர் ஜார்ஜ், விபசார தடுப்பு போலீசாருக்கு உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார், உதவி கமிஷனர் கணபதி ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான தனிப்படை போலீசார், காதல் மன்னன் ராஜனை கைது செய்ய தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
சென்னை சாலிகிராமம், முத்தமிழ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், ராஜன் ரகசியமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு, ராஜன் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை போலீசார் சுற்றிவளைத்தனர். ராஜன் தங்கி இருந்த வீட்டுக்குள் போலீசார் அதிரடியாக நுழைந்து, அவரை மடக்கிப்பிடித்தனர்.
கைது, 2 மனைவிகள் மீட்பு
இந்த முறை ராஜனால் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடமுடியவில்லை. தப்பி ஓடினால் சுட்டுத்தள்ளி விடுவோம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் ராஜன் போலீசாரிடம் நல்ல பிள்ளையாக நடந்து கொண்டார். அவர் கைது செய்யப்பட்டார்.
அவரை காதலித்து மணந்து, விபசாரத்தில் தள்ளப்பட்டு, வாழ்க்கையை இழந்த 2 இளம்பெண்கள் குறிப்பிட்ட வீட்டில் இருந்து மீட்கப்பட்டனர். இதேபோல இன்னொரு இளம்பெண்ணும், ராஜனின் காதல் வலையில் சிக்கி விபசாரத்தில் தள்ளப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட இளம்பெண்கள் இருவரும், அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். காதல் மன்னன் ராஜன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் தள்ளப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை