• Breaking News

    யாழ். சர்வதேச விமான நிலையம் தொடர்பில் வெளிவந்த புதிய செய்தி!

     யாழ். சர்வதேச விமான நிலையத்தில் பாரிய விமானங்கள் தரையிறங்கக் கூடிய வகையில் ஓடுபாதைகளை அபிவிருத்தி செய்வதற்கான நிதி இருந்தும், அரசாங்கம் அதனை செயற்படுத்தாமல் இருக்கின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

    வடக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்திச் செயற் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் தமிழ் பத்திரிகை ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் இதை குறிப்பிட்டார்.

    வடக்கு கிழக்கு மாகாணங்களை பொறுத்தவரை அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாத வகையில் இந்த காலகட்டங்களில் அரசாங்கம் பாரிய நிதி நெருக்கடியை சந்தித்து வருவதைக் குறிப்பிட வேண்டும்.


    என்றாலும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள சர்வதேச நிதி உதவியுடனான அபிவிருத்தித் திட்டங்கள் ஏன் தேங்கிக் கிடக்கின்றன என்பது எனக்குப் புரியாமல் உள்ளது.


    குறிப்பாக யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை குறிப்பிட முடியும்.

    அந்த விமான நிலையத்தில் பாரிய விமானங்கள் தரையிறங்க கூடிய வகையில் ஓடுபாதைகளை அபிவிருத்தி செய்வதற்கான நிதி அரசாங்கத்திடம் இருக்கின்றது.

    அதனை ஏன் செயற்படுத்தாமல் இருக்கின்றார்கள் என்பது எனக்குத் தெரியாது.


    அது சம்பந்தமான அமைச்சர் அதில் அக்கறை செலுத்தாமல் இருக்கின்றாரா?

    அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப் படுவது அவசியம்.


     யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் என்பது இந்திய பயணிகளுக்கானதாக மட்டுமன்றி அது சர்வதேச விமான நிலையமாக உயரும்போது,

    மத்திய கிழக்கில் இருந்து இந்தியாவுக்குச் செல்லும் பயணிகளுக்கான 'ட்ரான்சிஸ்ட் பொயின்ட்' ஆக அமையும் என்பதையும் அத்துடன் 'டியூட்டி ப்ரீ' வர்த்தகத்துக்கான பாரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளமுடியும் என்பதையும் குறிப்பிட முடியும்.


    சம்பந்தப்பட்ட அமைச்சர் அந்த விடயத்தில் கவனம் செலுத்துவார் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

    அதேவேளை, பருத்தித்துறையில் இலங்கையில் மிகப்பெரிய மீனவர் துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டுள்ள நிலையில் ஏனோ மேலும் மேலும் அது தாமதமாவதற்கான காரணம் தொடர்பில் ஊடகங்களே கேள்வியெழுப்ப வேண்டும்.

    சம்பந்தப்பட்ட அமைச்சர் அது தொடர்பில் சில விடயங்களை தெரிவித்துள்ளார். எனினும் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருட காலம் நிறைவு பெற்றுள்ள நிலையில் அத்தோடு சம்பந்தப்பட்ட அமைச்சரே தமிழ் சமூகத்திற்கும் மீனவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் அது தொடர்பில் பதிலைத் தெரிவிப்பார் என்று நான் நம்புகின்றேன் என்றார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad