• Breaking News

    ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறிய நியூஸிலாந்து சுகாதார அமைச்சர் ராஜினாமா

       ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி தனது குடும்பத்தினரை கடற்கரைக்கு அழைத்துச்சென்றது போன்று பல முறை கட்டுப்பாடுகளை மீறியதால் கண்டனங்களுக்குள்ளான நியூஸிலாந்து சுகாதார அமைச்சர்  தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    நியூஸிலாந்து நாட்டில் பெண் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் கொரோனா வைரஸ் பரவல் பிரச்சனையை மிக நேர்த்தியாக கையாண்டார். இதன் காரணமாக அங்கு கொரோனா வைரஸ் தொற்று 1528 பேருக்கு மட்டுமே பாதித்து, 22 பேர் மரணம் அடைந்த நிலையில் கட்டுப்படுத்தப்பட்டது. இது அவருக்கு பலத்த பாராட்டுக்களை சர்வதேச அளவில் பெற்றுத்தந்தது.

    அதைத் தொடர்ந்து அங்கு கடந்த மாதம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அந்த நாடு, கொரோனா வைரஸ்டம் இருந்து விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இயல்பு நிலையும் திரும்பியது.

    இருப்பினும் அந்த நாடு எல்லை விவகாரத்தையும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தனிமைப்படுத்தல் மையங்களை கையாண்ட விதமும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

    குறிப்பாக, வெலிங்டனில் தங்களது பெற்றோரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள இங்கிலாந்து நாட்டில் இருந்து வந்த இரண்டு  பெண்களை கொரோனா பரிசோதனை செய்யாமல், அனுமதித்ததும், அவர்களுக்கு பின்னர் கொரோனா உறுதி செய்யப்பட்டதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

    மேலும் அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் டேவிட் கிளார்க், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி தனது குடும்பத்தினரை கடற்கரைக்கு அழைத்துச்சென்றதும் கண்டனங்களுக்கு வழிவகுத்தது. இதே போன்று பல முறை அவர் கட்டுப்பாடுகளை மீறியதாகவும் புகார்கள் எழுந்தன.

    இந்த நிலையில் சுகாதார  அமைச்சர் டேவிட் கிளார்க் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையொட்டி அவர் கூறும்போது, ‘‘எனது பதவி காலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன். நாட்டில் சமூக பரவலுக்கு எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், நான் விடைபெற்றுச்செல்ல இதுவே சரியான நேரம்’’ என குறிப்பிட்டார்.

    அவரது ராஜினாமாவை பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் நேற்று ஏற்றுக்கொண்டு விட்டார். இதன்மூலம் ஜெசிந்தா ஆர்டர்ன் அரசுக்கு எதிரான விமர்சனங்கள் முடிவுக்கு வருகின்றன

     

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad