• Breaking News

    கிறிக்கெற் வரலாற்றில் பார்வையாளர்கள் இல்லாத டெஸ்ட்போட்டி

      இங்கிலாந்துக்குச் சென்றுள்ள மேற்கு இந்திய கிறிக்கெற்  அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இங்கிலாந்து - மேற்கு இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் நேற்று தொடங்கியது. கொரோனா அபாயத்தால் தடைப்பட்டிருந்த சர்வதேச கிறிக்கெற்  போட்டி 117 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கி இருக்கிறது. ஆனால் 143 ஆண்டு கால டெஸ்ட் கிறிக்கெற்  வரலாற்றில் முதல்முறையாக ரசிகர்கள் ஸ்டேடியத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.

    நாணயச்சுழற்சிக்கு முன்பு மழை குறுக்கிட்டது. இதனால் மதிய உணவு இடைவேளை வரை போட்டி நடக்கவில்லை. மழையால் மூன்று  மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டது. இதன் பிறகு நாணயச்சுழற்சியில் இங்கிலாந்து பொறுப்பு தலைவர் பென் ஸ்டோக்ஸ் முதலில் துடுப்பெடுத்தாடமுடிவு செய்தார். அந்த அணியில் மார்க் வுட் இடம் பெற்றதால் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் சேர்க்கப்படவில்லை. ஸ்டூவர்ட் பிராட் உள்ளூரில் டெஸ்ட் போட்டியை தவற விடுவது 2012-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல்முறையாகும்.

    ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக இரண்டு அணி வீரர்களும் சமீபத்தில் மறைந்த மேற்கு இந்திய ஜாம்பவான் சேர் எவர்டன் வீக்சின் மறைவுக்கு ஒரு நிமிடம் மெளனன அஞ்சலி செலுத்தினர். இதையொட்டி அவர்கள் கையில் கறுப்பு பட்டையும் அணிந்திருந்தனர்.


    அத்துடன் இனவெறியை கண்டித்தும், ஒற்றுமையை வலியுறுத்தியும், கறுப்பினத்தவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் இரண்டு அணி வீரர்களும், நடுவர்களும் மைதானத்தில் 30 வினாடி முட்டிப்போட்டு நின்றனர். ஆடும் அணியி  இடம் பெறாத வீரர்கள் எல்லைக்கோட்டுக்கு வெளியே முட்டிப்போட்டனர். மேற்கு இந்திய வீரர்கள் வலது கையில் கறுப்பு நிற கையுறை அணிந்து கொண்டு, இன்னொரு கையை மேல்வாக்கில் தூக்கியபடி நின்று கவனத்தை ஈர்த்தனர்.
     
      மேலும் இரண்டு முறை மழை குறுக்கிட்டு தொடர்ந்து ஆட்டம் நடந்தது. நிதானத்தை கடைப்பிடித்த இங்கிலாந்து அணி 17.4 ஓவர்களில் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெற்றுக்குடுக்கு 35 ஓட்டங்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சம் இன்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது பர்ன்ஸ் 20 ஓட்டங்களுடனும், டென்லி 14 ஓட்டங்களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர்.

     


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad