• Breaking News

  யுத்த விதிமுறைகளை மீறிய இலங்கை அரசு மீது பன்நாட்டு சமூகம் சரியான முறையிலே நடவடிக்கை எடுப்பதற்குத் தயங்குவது ஏன்? - கதிர் கேள்வி

   யுத்த விதிமுறைகளை மீறிய இலங்கை அரசு மீது பன்நாட்டு சமூகம் சரியான முறையிலே நடவடிக்கை எடுப்பதற்குத் தயங்குவது ஏன்? தொடச்சியாக இவ்வாறான நிலைப்பாட்டில் இருந்து மௌனம் காக்காது. நேரடியா இலங்கை மீது சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்வர வேண்டும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.

  ஐநாவின் 48வது கூட்டத்தொடர் மற்றும் சர்வதேச நீதி விசாரணையின் தற்போதையை நிலைமை தொடர்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் நிலைப்பாடு குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

  இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

  ஐநாவின் 48 வது கூட்ட தீர்மான வரைபில் இலங்கை தொடர்பான விடயங்கள் கையாளப்பட்டுள்ளன. இதில் தமிழர் தொடர்பான விடயங்களில் தமிழ்த் தரப்பு அரசியல்வாதிகள் தாங்கள் வைத்திருக்கும் தங்கள் கட்சி அரசியலை முன்னெடுத்து வருகின்றார்கள். 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவுற்றதன் பின்னர் பன்நாட்டு சமூகத்தால் முன்னெடுக்கப்பட்ட நீதி விசாரணைகள் தொடர்பான பரிந்துரைகள் யாவும் எமது மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் முழுமை பெறவில்லை என்பதோடு அவை வெறுமனே இலங்கை அரசாங்கத்தை அச்சறுத்தும், அடிபணிய வைக்கும் செயற்பாடுகளாகவேதான் இருக்கின்றன.

  இலங்கையில் முப்பது ஆண்டு கால யுத்தம் தோன்றியது ஏன்? யுத்தத்தின் பின்னரும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை பறிக்கப்பட்ட நிலையிலும், இலங்கை அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்ட நடவடிக்கைகளும் தொடர்ந்தும் இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றது. யுத்தத்திற்கு முற்பட்ட தந்தை செல்வாவின் காலத்தில் இனப்படுகொலைகள், கல்வித் தரப்படுத்தல் சட்டம், தமிழர்களின் வரலாற்று மையங்கள் அழித்தல், தமிழர்களின் சுயநிர்ணய உரிமை பறிக்கப்பட்டமை போன்றன காரணமாகவே ஜனநாயக வழிப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அந்த ஜனநாயகவழிப் போராட்டத்தின் அதியுச்சமே ஆயுதப் போராட்டமாக மாறியது.

  அதன் பின்னர் முப்பது ஆண்டு கால யுத்தத்தில் பாடசாலைகள், வைத்தியசாலைகள் போன்ற பொதுக் கட்டிடங்கள், பொதுமக்கள், சிறுவர்கள் மீதான குண்டு வீச்சுகள், படுகொலைகள், ஆட்கடத்தல், பாலியல் ரீதியாகப் பெண்களைத் துன்புறுத்தல் என ஜனநாயக மீறல்கள், சர்வதேச யுத்த விதிமுறைகளை மீறியது இலங்கை இராணுவம் என்பது வரலாற்று உண்மை. ஆயுதப் போராட்டத்திற்காக யுத்த விதிமுறைகளை மீறிய இலங்கை அரசு மீது பன்நாட்டு சமூகம் சரியான முறையிலே நடவடிக்கை எடுப்பதற்குத் தயங்குவது ஏன்?

  2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலிலே பல்லாயிரக் கணக்கான மக்கள் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டனர். உலகத்தில் தடைசெய்யப்ப்ட இரசாயண ஆயுதங்கள் பாவிக்கப்பட்டு எமது மக்கள் கொலை செய்யப்பட்டனர். இதற்கான அனைத்து ஆதாரங்கள், ஆவணங்கள் ஐநா சபையிடம் உள்ளன. போரிலே சரணடைந்த போர்க் கைதிகள், போராளிகள், காணாமல் ஆக்கப்பட்டடோர் உள்ளிட்ட விபரங்களும் ஐநா சபையிடம் இருக்கின்றது. இந்த ஐநா சபை தொடர்ச்சியாக இது தொடர்பில் இலங்கை அரசிற்கு எவ்விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது. இலங்கை அரசின் மீது நம்பிக்கை கொண்டு தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு முயற்சிக்கின்றது.

  இது உண்மையிலேயே எங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் விடயமாகவே இருக்கின்றது. சர்வதேச ரீதியான ஒரு பொறிமுறையை உருவாக்கி தமிழ் மக்களுக்கான ஒரு நீதி விசாரணை இடம்பெற்று, குற்றம் இளையத்தவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டு, எமது மக்களுக்கான நீதி கிடைக்க வேண்டும் என எமது மக்கள் பல ஆண்டுகளாகக் காத்து நிற்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் எமது மக்கள் ஐநாவின் மீது மிகுந்த நம்பிக்கையுடன் தேடி ஒடுகின்றனர். ஆனால் அங்கு சரியான முறையில் நடவடிக்கைகள் இடம்பெறகின்றனவா? மக்கள் எதிர்பார்க்கின்ற விடயங்கள் நடக்கின்றனவா? என்பதெல்லாம் மக்கள் மத்தியில் இன்னும் கேள்வியாகவே இருக்கின்றது.

  உண்மையிலேயே யுத்தத்தின் நேரடிப் பங்காளிகளும்,  நேரடிச் சாட்சிகளுமாகிய முன்னாள் போராளிகளாகிய எம்முடன் யுத்தம் முடிந்து பத்து ஆண்டுகள் கழித்தும் மறுவாழ்வு, இயல்புநிலை, நீதி விசாரணைகள் போன்ற விடயங்கள் தொடர்பில் எவ்வித நேரடிப் பேச்சுவார்த்தைகளில் இலங்கை அரசாங்கமோ, பன்நாட்டு சமூகமோ இதுவரைக்கும் ஈடுபடவில்லை. முன்னாள் போராளிகள் என்ற அடிப்படையில் எமது கருத்துக்களையும் முன்வைக்க வேண்டிய தேவை எமக்கிருக்கின்றது.

  போரினால் பாதிக்கப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட, மறுவாழ்வளிக்கப்பட வேண்டிய எமது சமூகம் பொருளாதார ரீதியாக சந்திக்கின்ற நெருக்கடிகள், முன்னாள் போராளிகளின் சமூக ரீதியான தேவைகள், அவர்கள் மீதான அச்சுறுத்தல்கள் போன்றன தொடர்பில் அரச தரப்போ, பன்நாட்டு சமூகமோ நேரடியாக எம்மோடு பேசச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு அது தொடர்பில் உண்மைகளைக் கண்டறிந்து செயற்படுவதற்கு முன்வர வேண்டும். ஆனால் மாறாக இன்றும் தொடச்சியாகப் போராளிகள் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றார்களே தவிர எந்தவிதான சமரச முயற்சிகளிலும் இலங்கை அரசு ஈடுபடவில்லை.

  ஈழத்தமிழர் போராட்டத்தில் எவ்வித தொடர்பும் இல்லாத தரப்பினரோடு தமிழர்களின் உரிமை நீதி தொடர்பான விடயங்களைப் பேசுவதால் எந்தப் பயனும் இல்லை. உண்மையும், நேர்மையும் அற்றவர்களோடு பேசியும் பலனில்லை.

  இன்று இலங்கைத் தீவில் வடக்க கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் தமிழர்கள் ஒரு தனித்துவமான இனம். தமிழர்கள் மீது இலங்கை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரும் வன்முறைகள், இராணுவ ஆக்கிரமிப்புகள் என்பனவற்றின் மூலம் தமிழர்களின் தனித்துவத்தை இன்னும் மதிக்கவில்லை என்பது மிகுந்த மனவேதனை அளிக்கின்றது.

  2009ம் ஆண்டு இலங்கை அரசாங்கம் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய இன அழிப்பு நடவடிக்கையினை வைத்து சர்வதேச சமூகம் இலங்கைக்குப் பல அழுத்தத்தைக் கொடுத்து தமிழர்களின் உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வரவில்லை. மாறாக சர்வதேச மட்டத்தில் இலங்கையில் காய்நகர்த்தல்களை மேற்கொள்வதற்காக தமிழர் பிரச்சினையைப் பகடையாகப் பயன்படுத்துகின்றதோ எனத் எண்ணத் தோணுகின்றது.

  தேசியத் தலைவரின் கொள்கை, அர்ப்பணிப்பு மனித குலத்தை மதித்தல் போன்ற விடயத்தில் வழிநடத்தப்பட்டு வந்த எம் இனம் இன்று வாழ்வு சாவின்றி ஏதிலிகளாக பன்நாட்டு சமூகத்திடம் நீதி கோரி பரிதாபத்திற்குரிய நிலையில் நிற்கின்றது.

  சர்வதேசமோ இலங்கை அரசை நம்பி தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண நினைக்கின்றது.  தமிழர்களுக்கு குறைந்த பட்ச அதிகாரமுள்ள இந்திய அரசின் அனுசரணையுடன் கொண்டு வரப்பட்ட 13வது திருத்தச் சட்டத்திலுள்ள மாகாணசபை அதிகாரங்களைக் கூட பகிர்ந்தளிக்க முடியாத இந்த பேரினவாத அரசாங்கம் புதிய அரசியலமைப்பை மாற்றம் செய்து தனிச் சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்து தமிழினத்தை அடக்கி ஆள நினைக்கின்றது. இந்த அரசிடம் இருந்து எமது இனத்திற்கான எவ்வித உரிமையையும் பெற்றுக்கொள்ள முடியாது.

  எனவே பன்நாட்டு சமூகமானது தொடச்சியாக இவ்வாறான நிலைப்பாட்டில் இருந்து மௌனம் காக்காது. நேரடியா இலங்கை மீது சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்வர வேண்டும். இலங்கையில் தமிழினத்தின் மீது மேற்கொண்ட இனப்படுகொலை போன்ற ஆவனங்களை வைத்துள்ள நிலையில் தமிழ் மக்கள் நலன் சார்ந்து சிந்தித்துச் செயற்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


  கருத்துகள் இல்லை

  Post Top Ad

  Post Bottom Ad