• Breaking News

    இறைவனை நிந்தித்த ஞானசார தேரருக்கு எதிராக முஸ்லிம் எம்.பிக்கள் முறைப்பாடு!

     முஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பும் விதமாகவும் இறைவனை நிந்திக்கும் விதமாகவும் சிங்கள தனியார் ஊடகமொன்றின் அரசியல் விவாத நிகழ்ச்சியில் கருத்துத் தெரிவித்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் தலைமையகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆகியவற்றில் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்கள்.

    பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், அல்ஹாபிழ் இசட். நஸீர் அஹமட், எம்.எஸ். தௌபீக், அலிசப்ரி ரஹீம், சட்டத்தரணி முஸாரப் முதுநபின், இசாக் ரஹ்மான் ஆகியோரே இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்கள்.

    ஞானசார தேரர் அண்மையில் சிங்கள தனியார் ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தினமன்று குண்டுத் தாக்குதல் நடத்திய குழு மற்றும் அவர்களை அந்த நடவடிக்கையில் ஈடுபடத் தூண்டிய விடயம் சில குர்ஆனின் போதனைகளாக இருப்பதுடன், அவர்கள் வணங்கும் இறைவனான அல்லாஹ்தான் இதற்கு முழுக்காரணம் என்றும் தெரிவித்திருந்தார்.

    இதனால் முஸ்லிம்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொதிப்படைந்துள்ளனர். தாம் வணங்கும் இறைவனை நிந்திக்கும் இந்தக்  கருத்து பாரதூரமானது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    எனவே, இவ்வாறான கருத்தைத் தெரிவித்த ஞானசார தேரரைக் கைது செய்து தண்டிக்க வேண்டும் என்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

    இந்த விடயம் தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது,

    "கடந்த காலங்களில் ஞானசார தேரர் சமூகத்துக்கு எதிராக செயற்பட்டதற்கு அமைய சட்ட ரீதியாக அணுகி அவர் தண்டிக்கப்பட்டார்.

    அதேபோன்று இவ்விடயம் சம்பந்தமாக தாங்கள் நாட்டின் முக்கிய உலமாக்கள், சட்டத்துறை விற்பன்னர்கள், சமூக நலவாதிகள் ஆகியோருடன் கலந்துரையாடினோம்.

    அவர்கள் கூறிய ஆலோசனை இது சம்பந்தமாக பாராளுமன்றத்தில் கடுமையான முறையில் விவாதிக்கும்போது ஞானசார தேரருக்குச் சார்பாக சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதைப் பாரிய சிங்கள - முஸ்லிம் குழப்பத்துக்குக் கொண்டுபோகச் செய்வார்கள்.

    எனவே இவ்வாறான சூழ்நிலையை விட இறைவனுக்குச் செய்த நிந்தனையையும் முஸ்லிம் மக்களுக்கு அச்சுறுத்தலாகச் செயற்படும் ஞானசார தேரரையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்க நடவடிக்கை எடுப்பது நல்லது என்று ஆலோசனை வழங்கியுள்ளனர்.

    அதற்கமையவே மிக நிதானமாகவும் சமூகப் பொறுப்புடனும் இவருக்கு நடவடிக்கை எடுக்கப் பொலிஸாரை அணுகியுள்ளோம். இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவைச் சந்தித்தும் பேசியுள்ளோம். 

    ஞானசார தேரருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்தியதுடன் அதற்கான துரித நடவடிக்கை எடுக்கப் பொலிஸாரைப் பணிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளோம்.

    மேலும், நாடு திரும்பியவுடன் ஜனாதிபதியை நேரில் சந்தித்து ஞானசார தேரர் இந்த நாட்டில் சமூகங்களிடையே பெரும் குழப்பத்தை உருவாக்க முயற்சிப்பதைச் சுட்டிக்காட்டி அவருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவதற்கும் தீர்மானித்துள்ளோம்" - என்றார்.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad