மன்னாரில் அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் காணப்படும் தண்ணீர் தாங்கியை அகற்றுமாறு கோரிக்கை
மன்னார் - உப்புக்குளம் கடற்கரை பகுதி (பீச் ரோட்டில்) கடந்த 20 வருடங்களுக்கு மேல் பாவனை இன்றி கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் சுமார் 70 அடி உயரமான தண்ணீர் தாங்கி சரிந்து விழக் கூடிய நிலை காணப்படுவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதன் சுற்றுச் சூழலில் வசித்து வரும் மக்கள் தினமும் அச்சத்துடன் வாழ்ந்து வருவதுடன், அதன் அருகே உள்ள பீச் ரோட்டினை மக்கள் அச்சத்துடன் பயன்படுத்தியும் வருகின்றதாக மன்னார் மக்கள் நல்லாட்சி மன்றத்தின் பொதுச் செயலாளர் எம். யூனூஸ் கனூன் தெரிவித்துள்ளார்.
தற்போது அபாய நிலையில் காணப்படும் தண்ணீர் தாங்கிக்கு முன்பு காணப்படும் பாதையை அப்பகுதி மக்களும் ஏனைய மக்களும் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர் .
எனவே இவ்விடயம் தொடர்பில் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு எதிர் வரும் காலங்களில் அனர்த்தம் ஏற்பட்டு உயிர்ச்சேதங்கள் ஏற்படுவதற்கு முன் விரைந்து செயல்பட்டு தண்ணீர் தாங்கியை உடன் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இப்பிரதேச மக்கள் சார்பாகப் பணிவன்புடன் வேண்டி நிற்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை