எரிவாயு கொள்கலன் வெடிப்புக்களுக்கான நட்டஈடுகளை பெற்றுக்கொள்வதில் சட்டச் சிக்கல்!
எரிவாயு கொள்கலன்களின் வெடிப்புகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடுகளை வழங்குவதில் எரிவாயு நிறுவனங்கள் இன்னும் உரிய பதில்களை வழங்கவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
எனினும் தொடர்ந்தும் அரசாங்கம், எரிவாயு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக நுகர்வோர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
லிற்றோ நிறுவனமும், லாப் நிறுவனமும், எரிபொருள் கொள்கலன் வெடிப்புக்களால் பாதிக்கப்பட்ட சுமார் 800 பேருக்கு நட்டஈடுகளை வழங்கவேண்டியிருப்பதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவின் தகவல்படி, உயிரிழப்புகள், காயங்கள் மற்றும் சொத்திழப்புக்கள் உட்பட்ட சம்பவங்கள் இதில் அடங்குகின்றன.
இதேவேளை, குறித்த இரண்டு நிறுவனங்களும் நட்டஈடுகளை வழங்க மறுத்தால், அந்த நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைளை எடுப்பதில் சிக்கல்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
சமையல் எரிவாயு கொள்கலன்களின் கலவை தொடர்பில் விதிமுறைகள் எதுவும் இல்லாமையே இதற்கான காரணம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், வெடிப்புக்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் கண்டுபிடிப்பின்படி, கலவை மாற்றமே வெடிப்புக்கான காரணம் என்பது கூறப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை பாதிக்கப்பட்ட பலர், எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளுக்கான முறைப்பாடுகளை ஏற்கனவே செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை