யாழில் இளம் ஊடகவியலாளர் மரணம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்
யாழில் இளம் ஊடகவியலாளர் பிரகாஷ் ஞானப்பிரகாசத்துக்கு தடுப்பூசி மறுக்கப்பட்டது மிகவும் அபத்தமானது என்று இலங்கையின் ஜனநாயகத்துக்கான பத்திரிகையாளர்கள் அமைப்பின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தவறான கொவிட் 19 தடுப்பூசி முகாமைத்துவக் கொள்கையால் கொரோனா தொற்றுக்கு இலக்காகிப் பாதிக்கப்பட்ட இளம் தமிழ் ஊடகவியலாளர் பிரகாஷ் ஞானப்பிரகாசம் உயிரிழந்தார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 26 வயதான இந்த ஊடகவியலாளர் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்த செய்தி உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான தமிழர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
பிரகாஸ் ஞானபிரகாசம் தசைநார் தேய்வால் பாதிக்கப்பட்ட ஒரு மாற்றுத் திறனாளியான இருந்தபோதும் அதற்காக ஒருபோதும் அவர் பிறரது அனுதாபத்தை நாடவில்லை. தன்னம்பிக்கையுடன் அவர் தனது உடல் உபாதைகளை எதிர்கொண்டவர்.
“நான் டாக்டர் லக்குமார் பெர்னாண்டோவிடம் ஆலோசனை பெற்றேன். தசைநார் தேய்வு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்” என பிரகாஷ் தனது ருவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
இலங்கையில் ஊடகவியயாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடுவதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் இந்த இளம் பத்திரிகையாளருக்கு அப்படி முன்னுரிமை அளிக்கப்படவில்லை.
இறப்பதற்கு ஒரு நாள் முன்பு புதன்கிழமைபிரகாஷ் சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவொன்றை இட்டிருந்தார். “ஐந்து நாட்கள் நீடித்த காய்ச்சலை தொடர்ந்து இன்று நான் கொவிட் பரிசோதனை செய்துகொண்டேன்.
கடந்த ஐந்து நாட்களாக இலேசான தலைவலி இருமலுடன் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தேன். சற்று தேறிவரும் நிலையில் இன்று அன்டிஜன் சோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது” என அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.
குணமடைந்த பின்னர் தடையின்றி எனது பணிகள் தொடரும். அதுவரை காத்திருங்கள்” என அந்தப் பதிவில் அவர் கூறினார்.
“சுகாதாரத் துறையினர் எனக்கு தடுப்பூசி போட மறுத்தார்கள். என் தந்தை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கேட்டபோது அவர்கள் எனது மருத்துவ அறிக்கைகளைப் பார்த்துவிட்டு தடுப்பூசி போட முடியாது” என்று சொன்னார்கள் எனவும் பிரகாஷ் குறிப்பிட்டிருந்தார்.
இராணுவத்தின் தலைமையிலான பணிக்குழு மூலம் மேற்பார்வை செய்யப்பட்ட மருத்துவ அதிகாரிகளால் அவருக்கு தடுப்பூசி மறுக்கப்பட்டது என்பதை அவரது ருவிட்டர் பதிவு தெளிவுபடுத்தியுள்ளது.
இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையிலான கொவிட் -19 தடுப்பு தேசிய செலலணி கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இலங்கை இராணுவம், அமைச்சர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டுக்கள் உள்ளன. அதேநேரத்தில் களப்பணியாளர்களுக்கான தடுப்பூசிப் பணிகள் தாமதமடைந்தன. தனது நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளை பிரகாஸ் நன்கு அறிந்திருந்தார்.
ஆயினும்கூட, அவர் அதை ஒரு குறைபாடாகக் கருதி ஒதுங்கியிராமல் துணிச்சலாக செயற்பட்டார். வடக்கு -கிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகள் மற்றும் நலனுக்காக ஊடகங்கள் ஊடாக தனது பங்களிப்பைத் தொடர்ந்தார். பல ஊடகங்களுக்கு ஒரு தவிர்க்க முடியாத தகவல் ஆதாரமாக இருந்தார்.
கருத்துகள் இல்லை