பாகிஸ்தானில் மற்றுமொரு வெறியாட்டம் - பெண்களை நிர்வாணமாக்கி வீதிகளில் இழுத்துச் சென்ற கொடூரம்...!
பாகிஸ்தானில் நான்கு பெண்களைநிர்வாணமாக்கிய கும்பல், அப்பெண்களை குச்சிகளால் அடித்து ஊர்வலமாக கூட்டிச் சென்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பாகிஸ்தானில் அண்மைய நாட்களாக கும்பலாக சேர்ந்து கொண்டு மதத்தின் பெயரால் வன்முறைகளில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சமீபத்தில் சியால்கோட் நகரில் தெய்வ நிந்தனையில் ஈடுபட்டதாக கூறி இலங்கையைச் சேர்ந்த பொறியலாளரை ஒரு கும்பல் அடித்துக் கொலை செய்து சாலையில் வைத்து எரித்த சம்பவம் சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியது.
கடந்த சில வாரங்களுக்கு முன் தெய்வ நிந்தனையில் ஈடுபட்ட நபரை பொலிசார் தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தி காவல்நிலையத்தை சூறையாடி, தீயிட்டு கொளுத்தியது ஒரு கும்பல்.
இப்படி கும்பலாக சேர்ந்து கொண்டு அரங்கேற்றப்படும் குற்ற நிகழ்வுகள் பாகிஸ்தான் அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெண்களின் ஆடைகளை களைந்து சாலைகளில் ஊர்வலமாக அடித்து துன்புறுத்தி அழைத்துச் சென்றிருக்கிறது ஒரு கும்பல்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ஃபைசலாபாத் நகரில் உள்ள கடை வீதியில் 4 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலம் அழைத்துச் சென்ற வீடியோ வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் பதின்பருவத்தைச் சேர்ந்த பெண் உட்பட நான்கு பெண்களை ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கி, குச்சிகளால் சிலர் அடித்தும் தர தரவென இழுத்தும் ஊர்வலமாக அழைத்துச் செல்கின்றனர். அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் யாரும் அப்பெண்களுக்கு உதவாமல் இருந்தது காண்போரை கலங்கச் செய்துள்ளது.
அந்த பெண்கள் சுமார் ஒரு மணி நேரம் இந்த கொடூரத்தை அனுபவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பஞ்சாப் மாகாண பொலிசார் இதில் தொடர்புடைய சிலரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உள்ளூர் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில் நடந்த சம்பவங்கள் குறித்து விவரித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, “அன்றைய தினம் பாவா சாக் நகரப்பகுதிக்கு குப்பை பொருட்களை சேகரிக்க சென்றோம். மிகவும் தாகமாக இருந்ததால் கடையொன்றுக்கு சென்று தண்ணீர் கேட்டோம்.
ஆனால் தண்ணீர் கேட்ட எங்களை திருட வந்தவர்களாக நினைத்த அக்கடையின் உரிமையாளர் சிலருடன் சேர்ந்து தாக்கினார். எங்களை குண்டுக்கட்டாக தூக்கி ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கி, குச்சிகளால் அடித்து சாலைகளில் ஊர்வலமாக கூட்டிச் சென்றனர். அங்கிருந்த ஒருவர் கூட எங்களுக்கு உதவவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை