• Breaking News

    தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் சாதக நிலை - மாற்றங்கள் விரைவில் என்கிறது அரசு...!

     பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதானவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் இதில் சாதகமான மாற்றங்கள் விரைவில் நடக்குமென தான் எதிர்பார்ப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

    பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாகியுள்ளவர்களின் விடுதலை தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

    நீதி அமைச்சு, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, தொழில்நுட்ப அமைச்சு, அபிவிருத்தி கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சு, மற்றும் இராஜாங்க அமைச்சுக்கள் மீதான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதம் நேற்று (9) நடைபெற்றது. இதில் உரையாற்றிய சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி கைதிகளின் விடுதலை தொடர்பில் வாக்குறுதி வழங்கப்பட்டாலும் அவை நிறைவேற்றப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

    பலர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் விரைவில் எதிர்பார்த்த மாற்றம் நடக்கும் சிறையிலுள்ளனர். 1994 ஆம் ஆண்டு கைதானவர்களும் உள்ளனர். இது தொடர்பில் பல முறை சுட்டிக்காட்டப்பட்டது. அவர்களின் வழக்குகளை துரிதப்படுத்துவதாக அமைச்சர் உறுதியளித்தாலும் வழக்கு தவணைகள் தொடர்ச்சியாக நீடிக்கப்படுகிறது. குற்ற ஒப்புதல் அடிப்படையில் வழக்கு நீடிக்கிறது. அவர்களை விடுவிக்கவோ புனர்வாழ்வளிக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும் வாக்குறுதி அளித்திருந்தார். பிரதமருக்கு நான் கடிதமொன்றை அனுப்பியிருந்தேன். 12 கைதிகள் வேறு வேறு சிறைச்சாலைகளில் உள்ளனர். சிலர் தனி ஒரு நபராக சிறையில் உள்ளார். அவர்களை மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார்.

    இதன் போது குறுக்கீடு செய்த நீதி அமைச்சர் அலி சப்ரி,

    பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 16 பேரை விடுதலை செய்திருக்கிறோம். முன்னாள் நீதியரசர் அசோக டி சில்வா தலைமையில் ஆலோசனை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதன் பரிந்துரைபடி 46 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பான விடயங்களை நாளாந்தம் விசாரிக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் பிரதம நீதியரசர் அறிவித்துள்ளார்.

    பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதானவர்கள் தொடர்பில் முக்கியமான கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதில் சாதகமான மாற்றம் நடக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

    அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும் இதன் போது கருத்துத் தெரிவித்ததோடு சட்ட நடைமுறைகளுக்கமையவே கைதிகளை விடுவிக்க வேண்டும். அது தொடர்பில் நீதி அமைச்சர் தேவையான நடவடிக்கை எடுக்கிறார். நாம் அரசியல் ரீதியில் எந்த வாக்குறுதியும் வழங்கவில்லை. அரசியல் ரீதியில் உங்கள் தரப்பு ஒருபோதும் எமக்கு உதவவில்லை. ஆனால் இந்த நாட்டு பிரஜைகளின் நலனுக்காக செயற்படுவோம் என்றார்.

    சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,  கடந்த 06 மாதமாக வெளியில் செல்லும் கைதிகளை விசேட அதிரடிப்படையினர் பரிசோதனை செய்கின்றனர். கைதிகளின் ஆடைகளை அவிழ்த்து கீழ்த்தரமாக நடத்துகின்றனர்.

    இதுதொடர்பில் ஆராயுமாறு கோரினார். அவை தொடர்பான ஆவணங்களை தனக்கு அனுப்புமாறு நீதி அமைச்சர் தெரிவித்தார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad