டைட்டானிக் கப்பலைப் போன்று நாடு மூழ்கிக்கொண்டு இருக்கின்றது - சஜித் சீற்றம்
தற்போதைய அரசாங்கம் முழு நாட்டு மக்களையும் மரணப்படுக்கையில் இட்டுவிட்டதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தெஹிவளை தேர்தல் தொகு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
டைட்டானிக் கப்பலைப் போன்று நாடு மூழ்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் அரசாங்கமானது அமைச்சுக் கேளிக்கைகளில் ஈடுபட்டு கொண்டு இருக்கின்றது.
தற்போதைய ஜனாதிபதி, ஜனாதிபதியானது ராஜபக்ஷர்களின் ஆசியுடன் என்பது உண்மை. என்றாலும், முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் பிரதமரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டது இந்நாட்டின் பொது மக்கள் போராட்டத்தினாலையே என்பதை ஜனாதிபதி மறந்துவிட்டார்.
அதனை அவர் நினைவில் வைத்திருந்தால், அவரால் இவ்வளவு கடுமையாக அடக்குமுறையை அமுல்படுத்த முடியாது.
மோசமான ஆட்சிமிக்க அரசாங்கத்தை மாற்றுவதற்கு கொள்கை ரீதியாக தலையிட்டதற்காக, கடந்த மே மாதம் 09ஆம் திகதிக்கு பின்னர் 3,500க்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர. 1200 இக்கும் அதிகமானோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய அரசாங்கம் முழு நாட்டு மக்களையும் மரணப்படுக்கையில் இட்டுவிட்டது.
30 வருட யுத்தத்தை வெற்றிக்கொள்ள முடிந்த போதிலும் நாடு என்ற முறையில் இன, மத, பேதத்தை கடந்து முன்னோக்கி பயணிக்க முடியாமல் போனது.
தற்போதைய அரசாங்கத்துக்கு மக்கள் மீது எந்த கரிசணையும் இல்லை. அமைச்சர்களை அதிகரிப்பது குறித்து அதிக கவனத்துடன் செயற்பட்டு வருகின்றது.
பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டுமக்கள் அசாதாரண நிலைமையை எதிர்கொண்டுள்ளனர்.
வியாபார நிலையங்களுக்கு சென்று தங்களது விருப்பத்துக்குரிய பொருட்களை கொள்வனவு செய்யக்கூட முடியாத நிலைமையே தற்போது ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை