• Breaking News

    முடிவுற்றது தவிசாளர் நிரோஷிற்கு எதிரான மாவீரர் தின நினைவேந்தல் வழக்கு!

     


    கடந்த ஆண்டு மாவீரர் தினம் நினைவேந்தல் தொடர்பில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதுடன் வழக்கும் முடிவுறுத்தப்பட்டது.

    மல்லாகம் நீதிமன்றில் கடந்த ஆண்டு மாவீரர் தினம் அனுஷ்டிப்புத் தொடர்பாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று புதன்கிழமை (28.09.2021) மல்லாகம் நீதிமன்றில் எடுத்துக்கொள்ள்பட்டது. அவ் வழக்கில, அச்சுவேலி பொலிசாரின் மேலதிக அறிக்கையின் பிரகாரம் கடந்த ஆண்டு இடம்பெற்ற மாவீரர் தின நினைவேந்தல்களில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் சட்டம் ஒழுங்கை மீறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி மல்லாகம் நீதிமன்றம் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷை விடுவித்தது.

    கடந்த (2021) மாவீரர் தினத்திற்கு முன்பாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளருக்கு எதிராக அவர் உள்ளிட்டவர்கள் குற்றவியல் சட்டக் கோவை சரத்து 106 , பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் கொவிட் தொற்று சட்ட ஏற்பாடுகளையும் அறிவுறுத்தல்களையும் மீறி மாவீரர் தினத்தினை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கின்றனர் எனத் தெரிவித்து, அதற்குத் தடை விதிக்குமாறு (வழக்கு இல AR 1577/21) மன்றில் விண்ணப்பித்திருந்தனர்.

    அதனை ஆட்சேபித்து கடந்த ஆண்டு சிரேஷ்ட சட்டத்தரணி சிறிகாந்தா தலைமையில் சட்டத்தரணி திருக்குமரன் உள்ளிட்ட குழாம் எதிர்த்து வாதிட்டிருந்தது.

    அவ் வழக்கில், (கடந்த ஆண்டு) குற்றவியல் சட்டக்கோவையின் மேற்படி சரத்தின் பிரகாரம் குற்றம் இழைப்பதற்கான வலுவான சாட்சியங்கள் இணைக்கப்படவில்லை என்றும் அரசியல் அமைப்பு ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நினைவு கூர்வதற்கான உரிமையினை மறுக்க முடியாது எனவும் ஏற்கனவே வலுவில் உள்ள சட்ட ஏற்பாடுகளையும் வர்த்தமானி அறிவுறுத்தல்களையும் சகலரும் கடைப்பிடிக்க வேண்டியவர்கள் எனவும் தெரிவித்திக்கப்பட்டிருந்தது.

    மேலும், எவராவது சட்டத்தை மீறினால் பொலிசார் கைது செய்ய முடியும் எனவும் பொலிசாருக்கு மன்று தெரிவித்திருந்தது. அவ்வாறு நீதிமன்று தெரிவித்திருந்த நிலையில், வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு கடந்த 14 ஆம் திகதி மீளவும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கட்டளை அனுப்பப்பட்டு வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    கடந்த 14 திகதி வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வழக்கில் நிரோஷ் சட்டம் ஒழுங்கை மீறியுள்ளாரா என பொலிசாரிடம் நீதிபதியினால் கேள்வி எழுப்பப்பட்டது.

    இந் நிலையில் அடுத்த தவணையான நேற்று புதன் கிழமை வழக்கு அழைக்கப்பட்ட போது மேலதிக அறிக்கையினை அச்சுவேலி பொலிசார் தாக்கல் செய்தனர். அதனை ஆராய்ந்த நீதிமன்றம் வழக்கு இனி அழைக்கப்படமாட்டாது எனத் தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad