55 ஆயிரம் கோடி செலவில் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு!
பிரித்தானிய மகாராணி எலிசபெத் காலமான நிலையில் அவரது இறுதிச் சடங்களுக்கும் அதன் பின் நடைபெற உள்ள நிர்வாக மாற்றங்களுக்கும் செலவாக உள்ள தொகையின் விபரங்கள் வெளியாகி திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவைத் தொடர்ந்து, பிரித்தானியாவில் நிர்வாக ரீதியாக சில கட்டாயமான மாற்றங்களைச் செய்ய பல பில்லியன் பவுண்டுகள் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரித்தானியாவின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா மற்றும் எதிர்வரும் 19ஆம் திகதி இறந்த மகாராணி எலிசெபத்தின் இறுதிச் சடங்குகளுக்கு என 6 பில்லியன் பவுண்டுகள் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்திய மதிப்பில் சுமார் 55 ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நிர்வாக ரீதியான மாற்றங்களுக்காக செலவழிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் தொகையுடன் ஒப்பிடுகையில் இந்தத் தொகை ஒன்றும் இல்லை என பிரித்தானிய பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
1952 இல் கிரீடத்தை கைப்பற்றியதிலிருந்து, ராணி எலிசெபத் உலகின் மிகவும் பிரபலமான நபராக மாறிவிட்டார்.
அவரது உருவப்படங்கள், முத்திரைகள், நாணயங்கள் மற்றும் குறிப்புகள் முதல் சில பெயர்கள் என்பன எல்லா இடங்களிலும் உள்ளன. அவரது கையொப்பங்கள் பிரித்தானியா முழுவதும் உள்ள தபால் பெட்டிகள் மற்றும் அரசாங்க அடையாளங்களில் வைக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தையும் படிப்படியாக அகற்றி, மூன்றாம் சார்லஸ் மன்னரின் புகைப்படங்களை இடம்பெறச் செய்வதற்கு மிக நீண்ட காலம் எடுக்கும். வல்லுநர்கள் பல ஆண்டுகள் அல்லது தசாப்தங்கள் கூட நீடிக்கும் என்று கூறுகிறார்கள். சிலவற்றை மாற்றவே முடியாது என்றும் கூறுகின்றனர்.
பிரிட்டனில் உள்ள தற்போதைய தபால் பெட்டிகள் ERII (எலிசபெத் ரெஜினா II) என்று குறிக்கப்பட்டுள்ளன. இனி அவை CRIII (சார்லஸ் ரெக்ஸ் III) மாற்றப்பட வேண்டும். பிரித்தானியாவில் தற்போது தோராயமாக 1,00,000 தபால் பெட்டிகள் உள்ளன, அவற்றை மாற்றுவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம்.
பிரித்தானியாவின் அஞ்சல்துறை அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, புதிய அஞ்சல் பெட்டிகளில் மட்டும் இந்த பெயர் மாற்றம் முதற்கட்டமாக மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில் இனி அச்சடிக்கப்படும் நாணயங்கள் மற்றும் பணத்தாள்களில் அரசர் சார்லஸின் படம் இடம்பெறும். ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் எலிசெபத் படம் இடம்பெற்ற நாணயங்கள் மற்றும் பணத்தாள்கள் வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களின் மூலம் படிப்படியாக திரும்பப் பெறப்படும்.
இருப்பினும் இந்த நடைமுறை மிக நீண்ட காலம் எடுக்கும் என்று சொல்லப்படுகிறது. மற்ற மாற்றங்களை விட இந்த நாணய மாற்றம் இங்கிலாந்தின் பொருளாதாரத்தையே உலுக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த மாற்றத்திற்கு 10 பில்லியன் பவுண்டுகளுக்கு மேல் செலவாகும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது இந்திய மதிப்பில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பணத்தாள்களை மாற்ற செலவழிக்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடவுச்சீட்டில் "அவளது" மாட்சிமையைக் குறிப்பிடும் வார்த்தைகள் (Her Majesty) "ஹிஸ்" மெஜஸ்டி என்று மாற்றப்படும். இதற்காக தற்போது புழக்கத்தில் இருக்கும் கடவுச்சீட்டுக்கள் மாற்றப்படாது என்றும் புதிய கடவுச்சீட்டுக்கள் அல்லது புதுப்பித்தலுக்கு உள்ளாகும் கடவுச்சீட்டுக்களில் மட்டும் இந்த மாற்றம் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை