• Breaking News

    ஈழத்தமிழினத்துக்கு இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் சர்வதேச நீதிமன்றிற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் - சிவாஜி தெரிவிப்பு!


    ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த வேளையிலே ஈழத்தமிழினத்துக்கு கடந்த காலத்தில் இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் போன்றவற்றுக்காக சர்வதேசத்திடம் நீதியினை கோரி நிற்கின்ற நிலைமையிலே இவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

    யாழில் நேற்று(14) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

    அவர் மேலும் தெரிவிக்கையில்,

    எவ்வாறான நெருக்கடிகள் ஏற்பட்டாலும் 13வது அரசியல் திருத்தத்தினை உள்ளடக்கிய தீர்வை ஈழத்தமிழினம் ஏற்றுக்கொள்ளாது. பொறுப்புக்கூறல் சம்மந்தமாக சர்வதேச நீதி எமக்கு கிடைப்பதற்கு இந்தியா துணை நிற்க வேண்டும் .

    எங்களுக்கு உரித்தான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வினை காண்பது தான் இலங்கைத் தீவிலே நிரந்தரமான அமைதியும்,சமாதானமும் ஏற்படும். அதை விடுத்து வேறுவழியாக செல்ல முடியாது.13 ஆவது அரசியல் திருத்தத்தினை தீர்வாக எங்களுக்கு இந்தியா வலியுறுத்திக் கூற கூடாது.

    இந்தியாவில் உள்ள 8 கோடி தமிழ் மக்களும் அரசியல் கட்சிகளும் ஈழத்தமிழர்களுடைய சுயநிர்ணய உரிமைக்காக ஆதரவினை வழங்க வேண்டும் என அழுத்த்த் திருத்தமாகவும் பணிவாகவும் கேட்டுக்கொள்கிறோம்.

    வடக்கு,கிழக்கிலே ஒரு பொதுசன வாக்கெடுப்பு ஒரு இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கு இந்தியா துணை நிற்க வேண்டும்.இதனால் எங்களுடைய நில ஆக்கிரமிப்பு ,மத ரீதியான அதாவது இந்து மக்களுடைய ஆலயங்கள் உடைக்கப்டுவது போன்றவற்றை நிறுத்தி நாங்கள் ஒரு தேசிய இனம் என்பதனை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad