யாழ்ப்பாணத்தில் கல்விக்கு வந்த சோதனை – சண்டிலிப்பாய் கோட்டக் கல்வி பணிமனை வாசலில் வீசப்பட்டிருந்த இன்றைய பரீட்சை வினாத்தாள்கள்!
வடமாகாண கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடைபெறும், தொண்டைமானாறு வெளிக்கள ஆய்வு நிலையம் நடத்தும் இன்றைய தவணைப் பரீட்சை வினாத்தாள்கள் சண்டிலிப்பாய் கோட்டக்கல்வி அலுவலகத்தின் முன்வாசலில் அதிகாலை வேளையில் போடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இது தான் வடமாகாண கல்வி திணைக்களத்தின் அனுசரணையுடன் வினாத்தாள் கையளிக்கும் நடைமுறையா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் இவ்வாறு வினாத்தாள்கள் வீசப்பட்டு உள்ளது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் அவர்களுக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்ட வேளை அவர் "இது தொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெறவில்லை எனவும், இந்த விடயத்தினை வலயக் கல்வி பணிப்பாளருக்கு தெரியப்படுத்துமாறும்" கூறினார்.
இதனையடுத்து வலயக்கல்வி பணிப்பாளர் ரவீந்திரன் அவர்களை தொடர்புகொண்டவேளை "வினாத்தாள்களை கொண்டு சென்றவர் பரீட்சை வினாத்தாள்கள் அதிபரிடம் தான் கையளித்ததாகவும் இவ்வாறு வீசப்படவில்லை" எனவும் தனக்கு தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார். அத்துடன் இது சம்பந்தமாக ஆராய்வதாக அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை