காரைநகர் தண்ணீர் கட்டணம் மற்றும் கசூரினா சுற்றுலா கடற்கரை கட்டணம் என்பவற்றில் மாற்றம்!
காரைநகர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் தவிசாளர் பாலச்சந்திரன் அவர்களது தலைமையில் கசூரினா கடற்கரையில் அமைந்துள்ள பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பல கட்டணங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அந்தவகையில் தண்ணீர் கட்டணத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் வருமாறு,
ஒரு லீற்றர் தண்ணீரின் விலை 1 ரூபா 30 சதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறித்த அளவு தண்ணீரை விட மேலதிக தண்ணீருக்கான விண்ணப்பம் கோரும்போது ஒரு லீற்றர் தண்ணீருக்கு 1 ரூபா 50 சதம்.
தினசரி ஒரு இலட்சத்து இருபதாயிரம் லீற்றர் தண்ணீருக்கு மேல் விநியோகம் செய்கின்ற நிலையில் தண்ணீரினை வீண் விரயோகம் செய்யாமல் இருக்கும் நோக்குடன் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது.
அடுத்ததாக கசூரினா கடற்கரைக்கான கட்டணங்கள் மாற்றம் செய்யப்பட்டன. அது தொடர்பான கட்டண விபரங்கள் வருமாறு,
திருமணம், பூப்புனித நீராட்டு விழா, பிறந்தநாள் நிகழ்வு அல்லது வேறு நிகழ்வுகளுக்கு வந்து படப்பிடிப்பு செய்பவர்களுக்கு 1000 ரூபா கட்டணம் செலுத்த வேண்டும் அத்துடன் படப்பிடிப்பிற்கு வருபவர்கள் ஒவ்வொருவருக்கும் 20 ரூபா கட்டணம் அறவிடப்படும். சுற்றுலா பயணிகளாக வரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கான (உள்நாடு அல்லாமல்) கட்டணம் 300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் பவுசர்களுக்கு ஜி.பி.எஸ் பொருத்தப்படவேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பவுசர்களை கண்காணிப்பதற்கும், மோசடிகளை தவிர்ப்பதற்கும், நேர சூசிகளை சரியாக பேணும் நோக்கிலும் இவ்வாறு ஜி.பி.எஸ் பொருத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் தண்ணீர் பவுசர்களுக்கு டிஜிட்டல் மீற்றர் பொருத்தப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. மக்கள், தங்களுக்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவினை துல்லியமாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இவ்வாறு டிஜிட்டல் மீற்றர் பொருத்தப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை