கடன்களை வாங்கி குவித்ததை தவிர மைத்திரி - ரணில் அரசு வேறு ஒன்றையும் செய்யவில்லையாம் - குற்றம்சாட்டுகிறார் மஹிந்த...
மத்தள விமான நிலையத்தில் நெல்லை களஞ்சியப்படுத்தும் அளவிற்கு வங்குரோத்து நிலைக்குச் சென்ற நல்லாட்சி அரசாங்கம் தன்னால் இயன்ற அளவிற்கு கடன்களை பெற்றுக் கொண்டதே தவிர அதன் மூலம் செய்தது ஒன்றும் இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட புதிய விமான ஓடுதளம் மற்றும் ஓடுபாதையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஆசியாவின் விமான சேவைக்கான கேந்திரநிலையமாக எமது விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு நாம் 2010ஆம் ஆண்டு தீர்மானித்தோம்.
நிகழ்காலத்துக்கு ஏற்ற வகையில் விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யவே நாம் விரும்பினோம்.
அதேபோன்று மேலும் 20 ஆண்டுகளுக்கு பின்னரான எதிர்காலத்தை கருத்தில் கொண்டே இந்த அபிவிருத்தி திட்டங்களை நாம் முன்னெடுத்துள்ளோம்.
ஜப்பானின் முன்னால் பிரதமர் ஷின்ஷே அபேயின் தலைமையில் 2014ஆம் ஆண்டிலேயே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி திட்ட ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
அபிவிருத்தி திட்டத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு முதலீட்டாளர்களுடனும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே 2015ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.
விமான நிலைய அபிவிருத்தி திட்டத்தை இரண்டு கட்டங்களில் நிறைவுசெய்வதற்கு அப்போது திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.
2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் இத்திட்டத்தை திட்டமிட்டபடி முன்னெடுத்து செல்லவில்லை.
எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே முதல் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இன்று நாம் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கும் இக்கட்டத்தின் பணிகளை ஆரம்பிப்பதனையும் நல்லாட்சி அரசாங்கம் தாமதப்படுத்தியது.
இக்கட்டிடத்தின் கூரையின் வடிவமைப்பை மாற்றுவதற்கான தேவை அவர்களுக்கு இருந்தது.
இந்த கூரை வடிவமைப்பை மாற்றுவதற்காக மாத்திரம் நல்லாட்சி அரசாங்கம் 661 மில்லியன் ரூபாயை செலவிட்டது.
அவ்வாறு திட்டத்தை மாற்ற முயற்சித்தமையாலேயே இரண்டாம் கட்டத்தின் பணிகளை ஆரம்பிக்க தாமதிக்கப்பட்டது.
இன்று முதல் விமான நிலையத்தில் 48 விமானங்களை நிறுத்தி வைப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனூடாக ஒரு ஆண்டிற்கு 6 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் 2023ஆம் ஆண்டளவில் 15 மில்லியன் வரை அதிகரிக்கும்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் மீது விடுதலை புலி பயங்கரவாதிகளினால் நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் உங்களுக்கு நினைவிருக்கும்.
அப்போது விமான நிலையத்தில் பணியாற்றியவர்கள் அத்தாக்குதலின் கொடூரத்தை அனுபவித்தனர்.
அந்த அவசர நிலையின் போது இலங்கைக்கு வந்த விமானங்களை மாற்றி அனுப்புவதற்கு வேறு விமான நிலையமொன்று எமக்கு இருக்கவில்லை.
அதனால் அண்மித்த நாடுகளுக்கு அவ்விமானங்களை அனுப்புவதற்கு எமக்கு நேரிட்டது.
அப்போதே மற்றுமொரு விமான நிலையத்தின் தேவை எமக்கு உணரப்பட்டது.
அதற்கமையவே கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு மேலதிகமாக மற்றுமொரு விமான நிலையத்தின் தேவை குறித்து எமது அரசாங்கம் கவனம் செலுத்தியது.
அதற்கமைய நாம் மத்தள விமான நிலையத்தை நிர்மாணித்தோம்.
2015ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் மத்தள விமான நிலையத்தை பொருளாதார அபிவிருத்திக்காக பயன்படுத்துவதற்கு மாறாக ராஜபக்ஷர்களை பழிவாங்கும் நோக்கில் நெல் களஞ்சியப்படுத்தினர்.
அவ்வாறான வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் முடிந்தளவு கடன்களை பெற்றுக் கொண்டது. ஆனால் செய்த வேலை ஒன்றும் இல்லை.
கடன் பெற்றால் அதனை முதலீடு செய்து ஏதேனுமொன்றை செய்திருக்க வேண்டும்.
மத்தள விமான நிலையம் எமது நாட்டிற்கே அந்நிய செலாவணியை ஈட்டித்தருகின்றது. அவை நம் நாட்டின் வளங்கள்.
நல்லாட்சி அரசாங்கத்திற்கு எந்தவொரு அபிவிருத்தி திட்டமோ, அபிவிருத்தி இலக்கோ காணப்படவில்லை.
மனிதாபிமான செயற்பாட்டின் மூலம் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, நாட்டில் அமைதி ஏற்படுத்தப்படுத்தப்பட்ட பின்னர் எமது நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உயர்வடைந்தது.
உண்மையில் சுற்றுலாத்துறையானது நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் பிரதான வருவாய் மார்க்கமாக காணப்பட்டது.
எமது நாட்டிற்கு வருகைத்தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததுடன், விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
கோவிட் தொற்று நிலைமையை அடுத்து மக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி செயற்பட்டமையால் கடந்த காலங்களில் விமான நிலையங்களை மூடினோம்.
நாடுகளுக்கு இடையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டதுடன், நம் நாட்டிற்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையும் நிறுத்தப்பட்டது.
சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்தது என்று விமான நிலைய அபிவிருத்தி தடைப்படுவதற்கு எமது அமைச்சர்கள் இடமளிக்கவில்லை.
மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிபடுத்தி, இருந்ததைவிடவும் சிறப்பாக சுற்றுலாத்துறையை முன்னெடுத்து செல்வதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துவதற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டார்.
எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் தொலைநோக்கு பார்வையுடன் திட்டமிட்டு செயற்பட்டது. அன்று மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் விமான நிலைய அபிவிருத்தி திட்டத்தின் அடிப்படை பின்னணியை தயார்செய்து, திட்டத்தை செயற்படுத்தும் அளவிற்கே கொண்டு சென்றோம்.
இம்முறை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்தி திட்டத்தை துரிதப்படுத்துவதாக தெரிவித்தார்.
வாக்குறுதிகளை வழங்குவது போன்றே எமது அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அதனை நிறைவேற்றியும் காட்டுகின்றோம்.
நாம் முன்னெடுக்கும் அனைத்து அபிவிருத்தி திட்டங்களின் மூலமும் எமது எதிர்கால சந்ததியினரே நன்மையடைவர் என்பதை நினைவுபடுத்த வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை