ஏழு தமிழ்பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து யாழில் முன்னெடுத்த கலந்துரையாடலில் 4 தீர்மானங்கள் நிறைவேற்று
தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து இன்று யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுத்தனர்.
இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், ரவும் ஹக்கீம் மற்றும் மனோகணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சுமார் ஐந்து மணிநேரம் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் இறுதியில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை கீழ்வருமாறு,
இந்த நாட்டின் அரசியல் சாசனத்தில் அமைந்திருக்கும் 13ஆவது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும். அத்துடன் மாகாண சபை தேர்தல் விரைவில் நடாத்தப்பட வேண்டும்.
அரசாங்கத்தினாலும் அரசாங்க ஆதரவுடனும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டடக்காணி அதிகரிப்பு நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.
பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு அதன் கீழ் தடுத்து வைத்திருக்கப்பட்டிருக்கும் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
பல்லின, பல்மொழி, பல்மத மக்கள் வாழும் இந்த நாட்டில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாட்டை முன்னெடுப்பதற்கும் நடைமுறைப்படுத்துவதற்காகவுமாக அமைக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி செயலணி மக்களுக்கிடையில் ஒற்றுமையின்மையும், பிரிவினையும் ஏற்படுத்தக்கூடிய பாரிய ஆபத்தைக் கொண்டிருப்பதால் நாம் அதனை திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்.
எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளும் கலந்துகொள்ளக்கூடியதாக எமது அடுத்த சந்திப்பு அடுத்த இரு வாரங்களுக்குள் நடாத்தப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசியக் கட்சி ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை