• Breaking News

    யோகா, ஜிம் - எது சிறந்தது ?

    தசைகள் இறுக வேண்டுமா அல்லது உடலை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டுமா? உடற் பயிற்சியில் இருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை பொருத்து, யோகாவை நாடலாமா அல்லது ஜிம்முக்கு செல்லலாமா என நீங்கள் தீர்மானிக்க முடியும். வல்லுனர்களின் கருத்துக்கள் கீழே

    முதலில் ஒரு விஷயம் கவனத்தில் கொள்ளவும். இந்தப் போட்டியில் தீர்மானமான வெற்றி என்பது கிடையாது. யோகா ஒட்டுமொத்த நலனுக்கு ஏற்றதுதான். ஆனால் இலக்கு அடிப்படையிலான தீவிர பயிற்சியை விரும்பினால், ஜிம்மில் ஒரு ஒரு மணி நேரம் செலவிடுவதற்கு நிகரில்லை. இரண்டின் சிறந்த பலனை பெற, இவற்றை இணைத்து பயன்படுத்துவதே சரி. இதன் மூலம் உடல் மற்றும் உள்ளத்தை கச்சிதமாக வைத்திருக்கலாம். ஒன்றில் மட்டும் கவனம் செலுத்த விரும்பினால் முயன்று பார்த்து முடிவுக்கு வரவும். இதோ ஒரு ஒப்பீடு...

    கலோரி  - சிறப்பானது: ஜிம்

    யோகா

    அடிப்படையான, மென்மையான, மெதுவான ஆசனங்களை கொண்ட ஹத யோகா, ஒரு மணி நேரத்திற்கு 298 கலோரிகளை செலவிடுகிறது. மிகவும் தீவிரமான அதிக உடல் உழைப்பு தேவைப்படும் அஷ்டாங்க யோகா ஒரு மணி நேரத்திற்கு 362 கலோரிகளை செலவிட வைக்கிறது.

    யோகாவில் எடை குறைப்பு என்பது காலப்போக்கில் மெதுவாக நிகழ்வது. ஜிம் மூலம் எடை குறைப்பதைவிட இது நீடித்த தன்மை கொண்டது என வல்லுனர்கள் கருதுகின்றனர். “உடனடி பலனை எதிர்பார்த்து யோகா செய்ய வேண்டாம்” என்கிறார் மும்பை யோகா வல்லுனரான தான்வி மெஹ்ரா. “எளிதாக வந்தால், எளிதாக போய்விடும்” என்கிறார் அவர்.

    ஜிம்

    கார்டியோவாஸ்குலர் பயிற்சிகள் அதிக கலோரிகளை செலவிட வைக்கின்றன. 60 நிமிட ஒர்க் அவுட்டில் 600 கலோரி செலவாகும். “குறுகிய காலத்தில் யோகாவை விட ஜிம் பயிற்சியில் பலன் பெற முடியும் எனும் காரணத்தினாலேயே இளைஞர்களில் பலர் யோகாவுக்கு பதில் ஜிம்மை நாடுகின்றனர்” என்கிறார் டால்வாக்கர்ஸ் பெட்டர்வேல்யூ ஃபிட்னஸ் முதன்மை பயிற்சி யாளர் நிதின் சவுத்ரி.

    வகைகள்  -  சிறப்பானது: யோகா

    யோகா

    முதுகை வளைப்பது, நிற்கும் நிலை, சுவாச உத்திகள் மூலம் பலவகையான ஆசனங்கள் செய்யலாம். உங்கள் ஃபிட்னஸ், மருத்துவ தேவை மற்றும் இலக்குகளுக்கு ஏற்ப, ஹத, அஷ்டாங்க, குண்டலினி, ஐயங்கார், விக்ரம் (ஹாட் யோகா), வினியோகா போன்ற பல வகைகளிலிருந்து ஒன்றை தேர்வு செய்யலாம். எனினும் உடலின் உறுப்புகளுக்கு தேவையான பலனைப் பெற இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆசனங்களை கலந்து மேற்கொள்ள வேண்டும். 

    ஜிம்

    உபகரணங்களுக்கு ஏற்பவே பயிற்சியின் வகைகள் அமையும். பெரும்பாலான ஜிம்களில் ஸ்டேர்மாஸ்டர்ஸ், எலிப்டிகல் எந்திரங்கள், ரோயிங் எந்திரங்கள், டிரெட்மில்கள், ஹிப் அப்டக்டர்ஸ், ஆஃப் கிரஞ்சர்ஸ், நிலையான சைக்கிள் ஆகியவை இருக்கும். ஒவ்வொன்றும் உடலின் ஒவ்வொரு பகுதியை இலக்காக கொண்டவை. பெரும்பாலானவை உங்கள் வயது, எடை, வேகம், எதிர்ப்புத் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் எவ்வளவு கலோரியை செலவிட வேண்டும் என தீர்மானிக்க உதவுகின்றன. 

    எளிமை   -  சிறப்பானது: யோகா

    யோகா

    ஒரு விரிப்பு, அமைதியான இடம் மட்டுமே யோகா செய்ய போதுமானது. “உடலுடன் உங்களை ஒன்றாக உணர வைப்பதுதான் யோகாவின் நோக்கம். உங்களால் மட்டும் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டுவர முடியும் என யோகா நம்புகிறது. இது முற்றிலும் உங்கள் உடல் மற்றும் சுவாசம் சார்ந்தது” என்கிறார் யோகா ஆசிரியரான ரூபல் சித்புரா பாரியா.

    ஜிம்

    எளிமையான பயிற்சிகள் முதல் சிக்கலானவை வரை உங்களுக்கு உபகரணங்கள் தேவை. சரியான அமைப்பு அல்லது உபகரணங்கள் இல்லாமல் பயிற்சி செய்வது கடினம் என்பது ஜிம்மில் பயிற்சி பெற்றவர்களின் வாக்குமூலம்.

    பாதுகாப்பு  - சிறப்பானது: யோகா

    யோகா

    இது பொதுவாக பாதுகாப்பாகக் கருதப்படுவதால், கர்ப்பிணிகள், காயத்தில் இருந்து குணமாகி வருபவர்கள், ரத்த அழுத்தம் உள்ளிட்ட மருத்துவ பிரச்சனைகள் கொண்டவர்களுக்குக்கூட பரிந்துரைக்கப்படுகிறது.

    ஜிம்

    பல ஒர்க் அவுட்கள் மிகவும் தீவிரமானவை. முறையான வழிகாட்டுதல் இல்லை எனில் காயம் ஏற்படலாம். அதிக அளவிலான பயிற்சி, குறிப்பாக இதய நோயாளிகள் விஷயத்தில் ஆபத்தானது.

    ஸ்டாமினா  - சிறப்பானது: இரண்டும் சமம்

    யோகா

    உடலின் மையப்பகுதி, தொடை, கால்&இடுப்பு தசைகளில் யோகா செய்பவர்கள் உருவாக்கிக் கொள்ளும் வலுவும் வளைந்து கொடுக்கும் தன்மையும் திறம்பட ஓட உதவுகிறது. காயமடைதலையும் குறைக்கிறது. மன அழுத்தத்தை குறைத்து, வலியை போக்கும் யோகா, ஓட்டப் பந்தய வீரர்கள் களத்தில் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    ஜிம்

    “ஜிம் பயிற்சி மராத்தான் பயிற்சிக்கு மிகவும் ஏற்றது. ஓடுவது, டிரெட்மில் மட்டும் அல்ல. சீரான வலுவாக்கல் பயிற்சியும் மிகவும் முக்கியமானது” என்கிறார் சவுத்ரி.

    உடலின் சீரான தன்மை - சிறப்பானது: யோகா உடலை சீராக்கும், தசைகளுக்கு ஜிம்

    யோகா

    “ஆசனங்கள் செய்யும்போது தசைகள் இறுகுகின்றன. ஆனால் யோகா உங்களை கட்டுடல் பெற வைக்காது” என்கிறார் சித்புரா. 

    ஜிம்

    உடலின் பகுதிகளை சீராக்க எடைப் பயிற்சியில் பலவித வாய்ப்பு கள் உள்ளன என்கிறார் சவுத்ரி.

    ஒட்டுமொத்த நலன் - சிறப்பானது: யோகா

    யோகா

    உடல்&உள்ள நலனை மேம் படுத்துவதால் இது ஒரு வாழ்வியல் முறை. மனச்சோர்வு, மன அழுத்தம், தூக்கமின்மையை போக்கவும் யோகா சிறந்தது.

    ஜிம்

    எல்லா உடற்பயிற்சியும் மூளையில் உள்ள ரசாயனங்களை தூண்டி, மனநிலையை மேம்படுத்தி உங்களை மகிழ்ச்சியாகவும், ரிலாக்சாகவும் வைக்கிறது. ஆனால் ஒட்டுமொத்த நலன் என்று வரும் போது, ஜிம் பயிற்சியுடன் ஆழமான மூச்சுப்பயிற்சியுடன் தியானம் செய்வது சிறந்தது.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad