நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: கொடும்பாவியும் எரிப்பு...!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு எதிராக வவுனியாவில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரைத் தரக்குறைவாகப் பேசியதைக் கண்டித்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான குலசிங்கம் திலீபனும் ஆதரவாளர்களும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரும் இணைந்து இன்று குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், அங்கிருந்து ஊர்வலமாக பசார் வீதி ஊடாக பழைய பேருந்து நிலையத்திற்குச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனுக்கு எதிராக கோசங்களை எழுப்பியதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கொடும்பாவி மீதும் தாக்குதல் நடத்தி அதனை எரியூட்டியுள்ளனர்.
இதில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பிரதேச மட்ட இணைப்பாளர்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கருத்துகள் இல்லை