• Breaking News

    என்னை கொல்ல முற்பட்ட பிரபாகரனையே நான் பழிவாங்கவில்லை - டக்ளஸ் தெரிவிப்பு...!

     என்னை கொலை செய்ய பல தடவை முயற்சி செய்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனையே நான் பழிவாங்கவில்லை. மாறாக அவரது மரணத்தில் பரிதாபம் ஏற்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

    கிளிநொச்சியில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

    அவர் மேலும்  குறிப்பிடுகையில்,  

    அழிவுகள், இழப்புக்கள், இடம்பெயர்வுகள் எமக்கு வந்திருக்காது. மேலும் பல மடங்கு முன்னேற்றகரமான வாழ்க்கையில் நாங்கள் இருந்திருப்போம். கெடுகுடி சொற்கேளாது என்பது போல அது அப்படியே போய்விட்டது   

    கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும்கூட சந்திரகுமார் எம்மோடு சேர்ந்து கேட்டிருந்தால் கட்சிக்கு 3 ஆசனங்கள் கிடைத்திருக்கும். ஆனால் அவருடன் சேர்ந்து கேட்டால் இங்கு வாக்கு விழாது என யாரோ கூறியிருந்த நிலையில் அவர் அதற்கு எடுபட்டு போய்விட்டார். அது அவருடைய விதி. அந்த விதியை மதியால் வெல்ல முடியும் என்று நான் நம்புகின்றேன். ஆனால் அவருக்கு அது முடியாமல் போய்விட்டது.

    கிளிநொச்சி மாவட்டத்தில் கடல் தொழிலோடு சம்பந்தப்பட்டது மாத்திரமல்லாது, சமுர்த்தி உள்ளடங்கிய சகல வேலைகளையும் மேற்பார்வை செய்யவும், அதனை கண்காணிக்கவும் வழிநடத்தவும் விரும்புகின்றேன்.

    அது எனக்குரிய சட்ட கடமைகளாகவும் இருக்கலாம். எனக்குரிய அரசியல் கடமைகளாகவும் இருக்கலாம். உங்களுடைய வாழ்வாதாரமும், வாழ்க்கையும் முன்னேறியது போல, தொடர்ச்சியாக மக்கள் இந்த சமுர்த்தி உதவி திட்டங்களில் தங்கியிருக்காமல், யாரையும் எதிர்பார்க்காமல் தங்களுடைய கால்களில் தங்கியிருக்க வேண்டும்.

    எனக்கும் அரசுக்கும் உள்ள புரிந்துணர்வுக்கூடாகத்தான் இவ்வாறான வாய்ப்புக்களை உங்களிற்கு பெற்றுக்கொடுக்கக்கூடியதாக இருந்தது.

    அந்த வகையில் இவ்வாறான மக்கள் கடமைகளை முன்னெடுப்பதற்கு, நீங்கள் எனக்கு பக்கபலமாகவும், ஒத்துழைப்பாகவும் இருக்க வேண்டும். என்னிடம் பழிவாங்கும் நடவடிக்கைகள் இல்லை. நான் பிரபாகரனையே பழிவாங்கவில்லை. என்னை எத்தனையோ தடவை கொலை செய்ய முற்பட்டவர். என்னுடன் இருந்தவர்களை கொன்றவர். என்னுடன் இருந்தவர்களை காயப்படுத்தியதுடன், துரத்தியவர், கடத்தியவர். அவர் இறந்த முறை சம்மந்தமாக எனக்கு பரிதாபம்தான் ஏற்பட்டது. இவ்வாறு அவர் சாகவேண்டிய நிலைக்கு அவரே தனக்குதானே குழுதோண்டிவிட்டார்  என பரிதாபம் ஏற்பட்டது.

    நான் உங்களிடம் எதிர்பார்ப்பது சட்ட கடமைகள், மக்கள் கடமைகளை மாத்திரமே. நீங்கள் எல்லோரும் பெரும்பாலும் இந்த பகுதியை சேர்ந்தவர்கள். இந்த பகுதி மக்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும். குறிப்பாக சமுர்த்தி வேலைத்திட்டத்தின் ஊடாக மாத்திரமல்ல, ஏனைய அமைச்சர்களுடைய வேலைத்திட்டங்களுடன் சேர்த்து நான் அதை மேற்கொள்ள விரும்புகின்றேன்.

    இன்றைய கலந்துரையாடலிற்கு சில உத்தியோகத்தர்கள் வருகை தரவில்லை. அவர்கள் வருகை தராமைக்கான காரணத்தை விளக்கமாக பெற்று தர வேண்டும்.

    எனக்கு பழிவாங்கும் எண்ணம் இல்லை. இருந்தாலும் வீம்பு பண்ணினால் நான் அவர்களை இடம்மாற்ற வேண்டி வரும். இது எனது சட்டபூர்வமான மக்கள் கடமை.

    பிரபாகரனையே பழிவாங்காத எனக்கு பழிவாங்கும் எண்ணம் கிடையாது. கோபத்தில் சும்மா கதைப்பதேயன்றி மற்றபடி எனக்கு அந்த நோக்கம் இல்லை. நீங்கள் எந்தளவுக்கு எந்தளவு முன்வந்து பங்களிக்கின்றீர்களோ, அந்தளவு தூரம் இந்த சமூகத்தை முன்னோக்கி கொண்டு வரலாம் என குறிப்பிட்டுள்ளார். 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad