காரைநகர்- வேரப்பிட்டியில் நடந்தது என்ன...???
காரைநகர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வேரப்பட்டி கிராம சேவகர் பிரிவில் தொல்பொருள் சின்னம் இருப்பதாக தெரிவித்து, அதனை பார்வையிடுவதற்காக தொல்பொருள் இராஜாங்க அமைச்சர் விதுல விக்ரமநாயக்க மற்றும் யாழ். அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் இன்று (05) அவ்விடத்திற்கு வருகைதந்தனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் இராஜாங்க அமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பலர் ஒன்றுகூடி இருந்தனர். அத்துடன் பெருமளவிலான பொலிசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
காணியினை பிடித்து விகாரை அமைப்பதற்காக குறித்த அமைச்சரும் ஏனையோரும் வருவதாக தெரிவித்த மக்கள் அவ்விடத்தில் ஒன்றுகூடி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அத்துடன் அப்பகுதியை சேர்ந்த சட்டத்தரணி ராஹினி அவர்களும் மக்களோடு சேர்ந்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்.
இந்தநிலையில் இராஜாங்க அமைச்சரும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அங்கஜன் இராமநாதன் அவர்களும் அவ்விடத்திற்கு வந்தனர். இதன்போது மக்கள் பலர் அவ்விடத்தில் ஒன்றுகூடி குறித்த இடத்தினை பார்வையிடுவதற்கு எதிர்ப்பை காட்டினர்.
அவ்விடத்திற்கு வந்த இராஜாங்க அமைச்சர் காணி ஒன்றினை அடையாளம் காட்டி, அந்தக்காணி லண்டனில் வசிக்கும் வைத்தியர் ஒருவரது காணியென்று கூறினார். அத்துடன் அந்த காணியில் தொல்லியல் சின்னங்கள் இருக்கின்றது.
குறித்த காணியை தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்துமாறு 2012ம் ஆண்டு லண்டனில் வசிக்கும் வைத்தியர் கூறினார். இங்கு சில தொல்லியல் சார்ந்த கற்கள் உள்ளன. ஆகவே அவற்றை நாங்கள் எடுத்துச்சென்று ஆய்வு செய்யப்போகின்றோம்.
நீங்கள் அனுமதித்தால் உங்களது பகுதியிலேயே அந்த தொல்பொருள் சின்னங்களை வைத்து ஆய்வுசெய்வோம். அல்லது யாழ். பல்கலைக்கழகத்திற்கு எடுத்து சென்று ஆய்வு செய்வோம் என்றார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள், இது எமது பூர்வீக நிலம். இங்கு அப்படி ஒரு வைத்தியர் இருந்ததாக எமக்கு தெரியவில்லை. இந்தக்காணி எமக்கு சொந்தமானது என்பதற்கான ஆவணங்கள் சகலதும் உள்ளன.
எனவே இங்கு அகழ்வு ஆராய்ச்சி செய்வதற்கு அனுமதி வழங்கமாட்டோம். இந்த கற்கள் நாங்கள் வீடு கட்டுவதற்காக கொண்டுவரப்பட்ட சாதாரண கற்களே. வைத்தியர் ஆய்வு செய்யுமாறு கூறி உங்களுக்கு வழங்கப்பட்ட ஆவணங்கள் எங்கே என்று கேட்டு சுமார் இரண்டு மணிநேரம் தமது எதிர்ப்பை காட்டினர்.
அத்துடன் இது இவ்வாறு தொடர்ந்தால் பாரிய போராட்டம் வெடிக்கும் என்றும் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அங்குவந்த யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் அங்கஜன் இராமநாதன், இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் இங்கு பார்வையிடுவதற்கு மட்டுமே வந்தேன். இங்கு என்ன நடக்க இருக்கின்றது என எனக்கு தெரியாது என்றார்.
அதன்பின்னர், அந்த வைத்தியர் வழங்கிய ஆவணம் சட்டரீதியானதா அல்லது போலியானதா என பரிசீலனை செய்துவிட்டு மீண்டும் அங்கு வந்து மேலதிக செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.
கருத்துகள் இல்லை