• Breaking News

    கதிர்காம கந்தன் ஆலயத்தின் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான மாணிக்கக் கல் மாயம்

     வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் கந்தன் ஆலயத்திற்கு இரத்தினபுரியை சேர்ந்த மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவர் காணிக்கையாக செலுத்திய 50 மில்லியன் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான மாணிக்கக்கல் காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது.  

    இது சம்பந்தமாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதனிடையே கதிர்காமம் கந்தன் ஆலயத்திற்கு காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்த 38 பவுண் தங்க தட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக அங்கொட லொக்காவின் மனைவி அகம்பொடிகே நிசன்சலாவிடம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

    அங்கொட லொக்காவின் மகனின் தோஷம் நீங்குவதற்காக அந்த தங்கத் தட்டு கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3 ஆம் திகதி ஆலயத்திற்கு காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி அந்த தங்க தட்டு காணாமல் போயுள்ளதாக கதிர்காமம் ஆலயத்தின் தகவல் கிடைத்துள்ளது. இது சம்பந்தமாக விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

    விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் கடந்த மாதம் 26 ஆம் திகதி என்.எம். அஜித் புஷ்பகுமார என்ற நபர், காணாமல் போனதாக கூறப்படும் தங்க தட்டை போன்ற தட்டு ஒன்றை எடுத்து வந்து கதிர்காமம் ஆலயத்தின் நிர்வாக செயலாளரிடம் ஒப்படைத்துள்ளார். ஆலயத்தின் பிரதான பூசகரான சோமபால ரத்நாயக்கவின் வீட்டுக்கு சென்றிருந்த போது, அவர் இந்த தங்க தட்டை ஆலயத்தில் ஒப்படைக்குமாறு தன்னிடம் கூறி, தங்க தட்டை வழங்கியதாக அந்த நபர் கூறியுள்ளார். இந்த தங்க தட்டு ஆலயத்திற்கு சொந்தமானது என பிரதான பூசகர் அப்போது கூறியதாகவும் அஜித் புஷ்பகுமார, ஆலயத்தின் நிர்வாக செயலாளரிடம் கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

    இவ்வாறான நிலையில், ஆலயத்திற்கு காணிக்கையாக செலுத்தப்பட்ட பல மில்லியன் ரூபாய் பெறுமதியான மாணிக்கக் கல் காணாமல் போயுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad