• Breaking News

    வவுனியாவில் அத்தியவசிய பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு எதிராக ஆர்பாட்டம்!

     


    வவுனியாவில் அத்தியவசிய பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு எதிராக ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

    புதிய ஜனநாயக மார்கசிச லெனினிச கட்சியினரால் வவுனியா பழையபேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

    இதன் போது ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

    மகிந்த கோட்டாபய அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் உழைக்கும் மக்கள் நடுவீதிக்கு தள்ளப்பட்டுள்ளதுடன், அவர்களது வயிற்றிலே அடிக்கும் அவலநிலையை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது.

    இந்தநிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் நாட்டில் பட்டினிச்சாவு ஏற்படும் அபாயநிலைமையை எவராலும் தடுக்க முடியாது. நாட்டை கொள்ளையடித்தவன், நாட்டுப் பணத்தை திருடியவன் எல்லாம் அதிகாரத்தில் இருந்து சுகபோக வாழ்க்கை வாழ்கின்றனர்.

    ஆனால் சாதரண மக்கள் இவர்களுக்கு வாக்களித்த குற்றத்தை தவிர வேறொன்றுமே செய்யவில்லை. கடந்த தேர்தல் காலங்களில் கோட்டாவும் மகிந்தாவும் கொடுத்த வாக்குறுதிகளால் மக்களின் பசியினை தீர்க்க முடிந்ததா.

    எனவே இராணுவமயமாகி வரும் இந்த கொடுங்கோல் ஆட்சியினை அழித்தொழிக்க நாட்டு மக்கள் ஒன்று திரண்டு தமது எதிர்ப்பினை வெளிக்காட்ட முன்வரவேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.   

    ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், உழைக்கும் மக்களை பட்டினி போடாதே, கட்டுப்பாட்டு விலையை கொண்டு வா, ஊழல் பணத்தை வெளியே கொண்டு வா, உழைப்போரை வதைக்காதே, தேர்தல் வாக்குறுதி என்னாச்சு போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

    ஆர்பாட்டத்தில் புதியஜனநாயக மாக்கசிச லெனினிச கட்சியின் செயலாளர் சி.கா.செந்தில்வேல், கட்சியின் முக்கியஸ்தர்களான செல்வம் கதிர்காமநாதன், நி.பிரதீபன்,  தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் ந.கருணாநிதி, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா கிளையின் பா.நேசராஜா, சமூகநீதிக்கான வெகுஜன அமைப்பினர் உட்பட பொதுஅமைப்புக்கள் ஆதரவினை வழங்கியதுடன், பெருமளவான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.






    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad