• Breaking News

    மூங்கிலாறு பகுதியில் சிறுமி மர்ம மரணம் - சந்தேக நபர்கள் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு!

     


    முல்லைத்தீவு மாவட்டத்தின் மூங்கிலாறு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி யோகராசா நிதர்சனாவின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

    கைது செய்யப்பட்ட ஐந்து பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் 18-01-2022 வரை நீடிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று குறித்த வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்தேக நபர்கள்  ஐந்து பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் 18-01-2022 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

    கடந்த மாதம் 13 ஆம் திகதி முதல் காணாமற் போயிருந்த நிதர்சனா, கொலை செய்யப்பட் நிலையில் 18 ஆம் திகதி சடலமாக அவரது வீட்டிலிருந்து சுமார் 400 மீற்றர் தொலைவில் மீட்கப்பட்டிருந்தார்.

    கடந்த 13 ஆம் திகதி தனது வீட்டிலிருந்து அக்காவின் வீட்டுக்கு செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்ட நிதர்சனா, பின்னர் காணாமற்போனதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் 15 ஆம் திகதி புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர் .

    ஆனால் இக்கதைகள் அனைத்தும் உருவாக்கப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்திருந்தது.  ஆரம்பத்தில் நிதர்சனா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரது அக்காவின் கணவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணையை ஆரம்பித்தனர்.

    பின்னர் இந்த கொலை சம்பவம் தொடர்பில் அவரது குடும்ப உறுப்பினர்களான தாய், தந்தை, சகோதரி ஆகியோரை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

    இவ்வாறு முல்லைத்தீவு மாவட்ட தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான விசேட குழு நடத்திய விசாரணையின் பின்னர் சிறுமியின் தந்தை கொலை தொடர்பான பல திடுக்கிடும் உண்மைகளை ஒப்புதல் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்.

    தனது மகள் நிதர்சனா இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும் இதனை அறிந்த அவரது தாய் கருவை கலைக்கும் முயற்சியில் கருவை கலைப்பதற்கு சிறுமியை மயக்கமடைய செய்யும் நோக்கில், ஏதோவொரு மருந்து வழங்கப்பட்டதாகவும் அவரது தந்தையின் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.


    குறித்த சிறுமி கருவினை கலைக்கும் முயற்சியின்போது அவர் உயிரிழந்திருக்கலாம் என்பதும் விசாரணையில் தெரியவந்திருந்ததாக புதுக்குடியிருப்பு காவல்துறையினர் தெரிவித்தனர். இவ்வாறான சம்பவங்களின் பின்னணியில் சிறுமியின் தாய், தந்தை, சகோதரி, சகோதரியின் கணவன், மைத்துனன் உள்ளிட்ட ஐவரும் கைது செய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad